இந்தியா

ஜூன் 6 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம்?

ஜூன் 6 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம்?

webteam

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜூன் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 351 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. அதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் 30 ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 31 ஆம் தேதி புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரை கூட்டுவதற்கான தேதி இறுதி செய்யப்படும் என தெரிகிறது. ஜூன் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்.

அப்போது புதிதாக தேர்வான எம்.பி.க்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தும், புதிய சபாநாயகருக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின், இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் மீது பிரதமர் மோடி உரையாற்றுவார்.