இந்தியா

ஓடும் ரயிலில் தவறி விழுந்த பெண் பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பெண் காவலர்!

webteam

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து நடைமேடைக்கும் ஓடும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் சிக்கிய பெண் பயணி ஒருவரின் உயிரை ரயில்வே பெண் காவலர் காப்பாற்றினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் ரயில் நிலையத்தில் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6.26 மணியளவில் கிளம்பியது. அப்போது ஓடும் ரயிலுக்குள் பெண் பயணி ஒருவர் ஏற முயன்றார். ஆனால் ரயில் வேகமெடுக்க துவங்கிய நிலையில் அந்த சமநிலை தவறி கீழே விழுந்தார். ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே அந்த பெண் பயணி சிக்கிக்கொண்டார். அங்கிருந்த ரயில்வே பெண் காவலர் வஹீதா கட்டூன் அந்த பெண்ணின் காலை பிடித்து இழுத்தார்.

ரயிலில் இருந்து அந்த பெண் சற்று தூரம் தள்ளி வரும் வரை காலை பிடித்து இழுத்தார் காவலர் வஹீதா. சிறிய சிராய்ப்புக் காயங்களுடன் பெண் பயணி உயிர்தப்பினார். சம்பவம் குறித்து காவலர் வஹீதா “ரயிலில் ஏறும் போது பெண் பயணி தவறி விழுந்ததைக் கண்டவுடன், அவரது உயிரைக் காப்பாற்ற ஓடி வந்தேன். அவள் காப்பாற்றப்பட்ட பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்” என்று கூறினார். பெண் பயணியை காவ்லர் வஹீதா காப்பாற்றும் வீடியோ ரயில்வே பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

“வஹீதா கட்டூன் தனது கடமையை உண்மையாக நிறைவேற்றி ஒரு பயணியின் உயிரைக் காப்பாற்றினார். இந்த துணிச்சலுக்காக, காவலர் வஹீதா கட்டூனுக்கு ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகளால் வெகுமதி அளிக்கப்படும்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்க வேண்டாம் என்றும், அது உயிருக்கு ஆபத்தானது என்றும் ரயில்வே பாதுகாப்பு படை வேண்டுகோள் விடுத்துள்ளது.