ஹரியானவை சேர்ந்த 25 வயதான இளைஞர் குல்தீப் மீது தவறான புகாரினால் பதியப்பட்ட வழக்கினால் அவரது அரசு வேலை கனவு பறிபோயுள்ளது.
குல்தீப்பின் தந்தை பல்பீர் சிங் ராணுவத்தில் பணியாற்றியவர். அதனால் குலதீப்புக்கும் சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற ஆர்வம் கொண்டிருந்துள்ளார்.
அதே நேரத்தில் ஹரியானா SSC தேர்வையும் அவர் எழுதியுள்ளார். அதன் மூலம் அவருக்கு அம்மாநில ஆயுத படை போலீஸ் பிரிவில் வேலையும் கிடைத்துள்ளது.
இருப்பினும் 2014இல் ரோத்தக் நகரில் இரண்டு சகோதரிகள் மூன்று இளைஞர்கள் தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக சொல்லி ஓடும் பேருந்தில் மூன்று இளைஞர்களை பெல்ட்டால் அடித்தது மட்டுமில்லாமல் அவர்கள் மீது போலீசில் புகாரும் கொடுத்தனர். அந்த வீடியோ அப்போது நாடு முழுவதும் வைரலானது.
அந்த வழக்கில் சிக்கியவர் தான் குல்தீப். தற்போது அந்த வழக்கிலிருந்து குற்றம் செய்தமைக்கான முகாந்திரம் எதுவும் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டு நீதிமன்றங்களில் நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் குல்தீப் குற்றவாளி இல்லை என நீதிபதிகள் சொல்லி அவரை விடுதலை செய்துள்ளனர்.
இருப்பினும் அவரது போலீஸ் கனவு நிறைவேறாமலே உள்ளது. இந்நிலையில் அவருக்கு மாநில அரசு உரிய உதவி செய்ய வேண்டுமென்றும், அவரின் கனவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலரும் சமூக வலைதளத்தில் ஹரியானா முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்