nota - bjp  pt web
இந்தியா

விறுவிறுப்பாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை; ஒரு தொகுதியில் மட்டும் NOTA vs BJP இடையே நடந்த போட்டி...

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக நடந்துவரும் நிலையில், மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் பாஜகவிற்கும் நோட்டாவிற்கு இடையே போட்டி ஏற்பட்டது.

Angeshwar G

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகி வருகின்றன. மாலை 6 மணி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதில் பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 294 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. INDIA கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 17 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றன.

அக்‌ஷய் கண்டி பாம்

இந்நிலையில்தான், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக வேட்பாளருக்கும் நோட்டாவிற்கும் இடையே முக்கிய போட்டி ஏற்பட்டது. இந்தூரில் நோட்டாவிற்கு மட்டும் 2,18,674 வாக்குகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் என்ன நடந்தது?

இந்தூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் கண்டி பாம், பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா உடன் சென்று ஏப்ரல் 29 அன்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதன்பின்னர், பாஜகவிலும் இணைந்தார். அந்த தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக, சிட்டிங் எம்பி சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிட்டார்.

இந்நிலையில்தான், காங்கிரஸ் கட்சி நோட்டாவுக்காக பிரசாரம் செய்தது. தற்போது, அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த சூழலில், பாஜக-வின் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதற்கு அடுத்தபடியாக நோட்டாவே அதிகளவு வாக்குகளைப் பெற்றுள்ளது. நோட்டாவிற்கு மட்டும் 2,18,674 பேர் வாக்களித்துள்ளனர். அடுத்தபடியாக, பகுஜன் சமாஜ் கட்சியின் சஞ்சய் 51,659 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சங்கர் லால்வானி

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜிது பத்வாரி, மக்கள் நோட்டாவிற்கு வாக்களித்ததாக மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை சீர்குலைக்க பணத்தை பயன்படுத்திய பாஜகவிற்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில், சங்கர் லால்வானி, காங்கிரஸ் கட்சியின் பங்கஜ் சங்வியைத் தோற்கடித்து 5,47,754 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.