இந்தியா

“வேண்டியவர்களை மட்டும் நியமிக்கிறது” - மத்திய அரசை விமர்சித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

“வேண்டியவர்களை மட்டும் நியமிக்கிறது” - மத்திய அரசை விமர்சித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Sinekadhara

தீர்ப்பாயங்களில் பதவிகளை நிரப்பும் விவகாரத்தில் நீதிபதிகள் பரிந்துரைத்த பெயர்களை ஏற்கவில்லை எனக் கூறி மத்திய அரசை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட தீர்ப்பாயங்களில் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி என்.வி.ரமணா மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சில தீர்ப்பாயங்களில் மட்டும் தங்களுக்கு வேண்டியவர்களை மத்திய அரசு நியமித்துள்ளதாகவும் நீதிபதிகள் பரிந்துரைத்த பெயர்கள் நிராகரிப்பட்டிருப்பதாகவும் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். எதிலும் அரசுதான் இறுதி முடிவு எடுக்கும் என்றால் நேர்காணல்கள் நடத்தி நீதிபதிகள் தங்கள் பரிந்துரையை அரசுக்கு அளிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப கடைசியாக இன்னும் இரு வாரம் அவகாசம் கொடுப்பதாகவும் அதுவரை தாங்கள் பொறுமை காக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இதே வழக்கு கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மத்திய அரசு மதிப்பதில்லை என்றும், தீர்ப்பாயங்கள் பணியிடங்களை நிரப்ப இயலவில்லை என்றால் அவை அனைத்தையும் கலைத்து விடுங்கள் நாங்களே அதனை செய்து கொள்கிறோம் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டமாக கூறியிருந்தார்.