ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முகநூல்
இந்தியா

”தமிழக அரசு ஒரு அடி எடுத்து வைத்தால், மத்திய அரசு இரண்டு அடிகளை எடுக்கும்”- மத்திய ரயில்வே அமைச்சர்!

ரயில்வேயின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு ஒரு அடி எடுத்து வைத்தால் மத்திய அரசு இரண்டு அடிகளை எடுத்து வைக்கும் என ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில் ரயில்வேயின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு ஒரு அடி எடுத்து வைத்தால் மத்திய அரசு இரண்டு அடிகளை எடுத்து வைக்கும் என ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப்பாதை தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், “புதிய வழித்தட திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் 674.8 கோடி ரூபாயும், இரட்டைப் பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி ரூபாயும் குறைத்திருப்பது, தமிழ்நாட்டில் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், “ தமிழகத்தில் ரயில்வேயை மேம்படுத்தை என்.டி.ஏ அரசு இதுவரை இல்லாத அளவாக 6ஆயிரத்து 362 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆண்டுக்கு சராசரியாக ஒதுக்கீடு செய்த 879 கோடி ரூபாயை விட 7 மடங்கு அதிகம் .

நமது அரசமைப்பின் கீழ் நிலம் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. நிலம் கையகப்படுத்துவதில் மாநில அரசு ஆதரவு அளித்தால்தான் தங்களால் அனைத்து திட்டங்களையும் வேகமாக செயல்படுத்தமுடியும். 2 ஆயிரத்து 749 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவேண்டிய இடத்தில் இதுவரை வெறும் 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். ரயில்வேயின் மேம்பாட்டிற்கு தமிழக அரசு ஒரு அடி எடுத்து வைத்தால் தங்கள் பங்கிற்கு மத்திய அரசு இரண்டு அடி எடுத்து வைக்கும்.” என உறுதியளிப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.