ஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் நிகழ்வும் போதும் மாநில அரசுகள் கேட்கும் நிவாரண தொகையில் மத்திய அரசு சிறிய தொகையை மட்டுமே தருகிறது.
மழை, வெயில், புயல், வெள்ளம், வறட்சி மாதிரியான இயற்கை சீற்றங்களால் அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படுவது வழக்கம். விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் என எல்லோருக்குமே இயற்கை சீற்றங்களால் பாதிப்பு தான்.
அதீத மழை பயிரை அழுக செய்தும், அதீத வறட்சி பயிரை வாட செய்துவிடுவதும் உண்டு. அது மாதிரியான சமயங்களில் பாதிப்புக்கு உள்ளான மக்கள் மாநில அரசின் உதவியை நாடுவது உண்டு. அப்போது சம்மந்தப்பட்ட மாநில அரசும் மத்திய அரசிடம் தங்களுக்கு தேவையான நிவாரண தொகையை கோருவது உண்டு. இருப்பினும் அந்த பாதிப்புகளை மத்திய அரசின் வல்லுநர்கள் கள ஆய்வு செய்த பிறகே நிவாரண தொகை வழங்கப்படுகிறது. அண்மையில் தமிழிககத்தை மையம் கொண்டு நிவர் மற்றும் புரெவி மாதிரியான புயல்கள் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் போது மத்திய அரசிடம் கேட்ட நிவாரண தொகையும் கிடைத்த உதவியும் குறித்து பார்க்கலாம்.
2011 - 12 இன் போது வீசிய தானே புயலின் போது 5249 கோடி ரூபாய் தமிழக மாநில அரசு நிவாரணமாக கோரியிருந்தது. ஆனால் மத்திய அரசாங்கம் ஒதுக்கியதோ 500 கோடி ரூபாய் தான்.
2012 - 13 வறட்சியின் போது 19988 கோடி ரூபாய் நிவாரணமாக கேட்கப்பட்டது. ஆனால் கிடைத்ததோ 656 கோடி தான்.
2015 - 16 சென்னை மழை வெள்ளத்தின் போது 25912 நிவாரணமாக கேட்டதற்கு 1738 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.
2016 - 17 வறட்சியின் போது 39565 கோடி ரூபாய் கேட்டதற்கு 1748 கோடி மட்டுமே கிடைத்தது.
2016 - 17 வர்தா புயலின் போது 22573 கோடி ரூபாய் கேட்டதற்கு 266 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.
2017 - 18 ஒக்கி புயலின் போது 9302 கோடி ரூபாய் கேட்டதற்கு 133 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.
2018 - 19 இல் வந்த கஜா புயலின் போது 17899 கோடி ரூபாய் கேட்டதற்கு வெறும் 1146 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது.
இப்போது கூட நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக 3758 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. அதிலும் சிறிய தொகையை மட்டுமே மத்திய அரசு ஒதுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.