இந்தியா

தனிக் கொடி காண கர்நாடகா முயற்சி.. தேச விரோதம் என்கிறது பாஜக

தனிக் கொடி காண கர்நாடகா முயற்சி.. தேச விரோதம் என்கிறது பாஜக

Rasus

கர்நாடகா மாநிலம் தனக்கென தனிக்கொடியை வடிவமைக்க முயற்சித்து வருவது தேச விரோத செயல் என பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் இந்தி மொழி எதிர்ப்பு பிரச்சாரம் ஏற்கெனவே தீவிரமடைந்திருக்கும் நிலையில், அம்மாநிலத்துக்கென தனிக் கொடியை வடிவமைக்கும் முயற்சியில் சித்தராமையா அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீரை தவிர, வேறு எந்தவொரு மாநிலத்துக்கும் தனிக் கொடி கிடையாது. அவ்வாறு தனிக் கொடி வைத்துக் கொள்வதற்கு அரசமைப்பு சட்டத்திலும் இடம் இல்லை. இந்நிலையில், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை தேச விரோத செயல் என பாஜக வன்மையாக கண்டித்துள்ளது.

‌மாநிலத்துக்கு என தனியாக கொடி கேட்பது முற்றிலும் தவறானது என்றும், இதை பாஜக ஆதரிக்காது என்றும் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சோபா கரண்லஜே தெரிவித்துள்ளார். அரசமைப்பு சட்டத்தில் அதற்கு இடம் இல்லை என்றும் தேசிய கொடியை வைத்து கொள்வதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், அரசமைப்பு சட்ட நிபுணர் பி‌.பி.ராவ்வும் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேசமயம் அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு மாநிலத்துக்கென்று தனிக் கொடியை வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.