’இயற்கை பாதுகாப்பு’ என்பது ஒவ்வொரு நாடும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று. ஆனால் சில நாடுகள் இயற்கையை பாதுகாப்பதை தவறவிடுவதுடன், இயற்கையை அழித்து, காற்றை மாசுப்படுத்தி, சுற்றுச் சூழலை ஆரோக்கியமற்றதாக மாற்றி வருகின்றன. இதனால் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுடன், ஆறு ஏரி குளங்கள் அழிந்து வருவதால் விவசாயம் குறைவதுடன் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
நாம் வாழும் இந்த பூமியை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமையாக இருக்கிறது .
இந்நிலையில் “இயற்கைப் பாதுகாப்புக் குறியீடு,”(NCI) Nature Conservation Index என்ற அமைப்பானது ஒவ்வொரு நாடும் அதன் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை மதிப்பிட்டு வருகிறது.
அதன்படி இந்த அமைப்பு 180 நாடுகளின் இயற்கைப் பாதுகாப்புக் குறியீடு பட்டியலில், ஆபத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகளின் எண்ணிக்கை , பாதுகாக்கப்பட வேண்டிய நிலங்கள் மற்றும் பகுதி போன்ற காரணிகளைக்கொண்டு , சிறந்த மற்றும் மோசமான நாடுகளின் பட்டியலை தயார் செய்துள்ளது.
அந்த வகையில் இயற்கைப் பாதுகாப்பில் உலகின் சிறந்த நாடாக முதலிடத்தைப் பெறுவது லக்சம்பர்க். (Luzembourg) இந்த நாடு 100-க்கு 70.8 மதிப்பெண்களைப்பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இங்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகள், பரந்த அளவிலான தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு சரணாலயமாக இந்த நாடு செயல்படுவதாக கூறப்படுகிறது.
இயற்கை பாதுகாப்பற்ற மோசமான நாடுகளின் தரவரிசையில் இந்தியா 6-வது தரவரிசையில் இருக்கிறது. இது வேதனையளிக்கும் செய்தியாகும்.