உலக மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டுமே இயக்கும் விமானங்கள், பெண் பயணிகளுக்கு சலுகைகள் என விமான நிறுவனங்கள் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை போற்றும் விதமாக கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டுமே இயக்கும் விமானங்கள், பெண் பயணிகளுக்கு சலுகைகள் என விமான நிறுவனங்கள் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று புதுடெல்லி- சிட்னி, புது டெல்லி -ரோம் உள்ளிட்ட பன்னிரெண்டு சர்வதேச விமானங்களையும், 40 உள்நாட்டு விமானங்களையும் முழுவதும் பெண்களே இயக்குவார்கள் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பயணங்களை மேற்கொள்ளும் பெண் பைலட்கள் மற்றும் சிப்பந்திகளுக்கு அந்த நிறுவன தலைவர் அஸ்வானி லோஹானி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனமும் பெண்கள் மட்டுமே இயக்கும் விமானம் ஒன்று புது டெல்லியிலிருந்து தர்மசாலாவிற்கு பயணிக்கும் என அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேபோல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் பெண்களை மட்டுமே கொண்டு நான்கு உள்நாட்டு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. மும்பை - புது டெல்லி மற்றும் மும்பை -பெங்களூரு இடையே இந்த விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெண் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கி ஆச்சரியப்படுத்தவும் ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 22 விமானங்களை பெண்கள் மட்டுமே கொண்ட குழுவால் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. பெண் பயணிகளுக்கு செக் இன் மற்றும் போர்டிங்கிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோ ஏர் நிறுவனம் பெண் பயணிகளுக்கு இருக்கைகள் கையிருப்பை பொறுத்து உயர்வகுப்பு இருக்கைகள் ஒதுக்கித் தரப்படும் என அறிவித்துள்ளது.