இந்தியா

17-வது மக்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

webteam

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டாவது ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இடைக்கால சபாநாயகர் எம்பி வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து 19ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. வரும் 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார். 


இதனையடுத்து கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காலாவதியான 46 சட்ட மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பது, முத்தலாக் தடை உள்பட முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது. மேலும் வேலையின்மை, குடிநீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை குறித்து எதிர்கட்சிகள் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து ஜூலை 5ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்‌. இன்று தொடங்கும் பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜூலை மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது‌.