வீட்டு ஹாலில் சோஃபாவுக்கு அடியில் 16 அடி நீளமுடைய ராஜநாகம் ஒன்று பதுங்கியிருப்பதைக் கண்டு வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு எனும் கிராமத்தில் வசித்து வருபவர் மனீந்திரன். இவரது வீடு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
நேற்று மாலை மனீந்திரனின் வீட்டில் உள்ள அறை ஒன்றில் சோஃபாவுக்கு அடியில் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். டார்ச் அடித்து பார்த்தபோது அது பெரிய நீளமுடைய ராஜநாகம் பாம்பு எனத் தெரியவந்தது.
ராஜநாகம் கடுமையான விஷம் உடைய பாம்பு என்பதால் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். வனத்துறையின் வேண்டுகோளுக்கிணங்க ராஜநாகம் பாம்புகளை மீட்பதில் கைதேர்ந்தவரான வாவா சுரேஷ் என்ற பாம்புபிடி ஆர்வலர் அங்கு வந்தார்.
சோஃபாவை விலக்கியதும் ராஜநாகம் தலையை தூக்கி நின்றது. இதன் நீளம் 16 அடி வரை இருக்கும். பின்னர் பாம்பை லாவகமாக பிடித்து, பையில் சுருட்டி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டார்.
'வனப்பரப்பு சுருங்கிக் கொண்டு வருவதால் ராஜநாகம் பாம்புகள் பெருமளவில் அழிந்து அருகி விட்டன. மிக அரிதாக கண்களில் படும் இந்த பாம்புகளை கொல்லாமல் பாதுகாக்க வேண்டும்' என்று வாவா சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.