ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து, கிஷ்துவாரின் சாட்ரோ பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடியும் இன்று ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார். இந்த சூழலில், பயங்கரவாதிகள் ஊடுவ முயல்வதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளதால், எல்லையோர பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.