தமிழகத்தில் எண்ணெய் எடுக்க ஏலம்., pt web
இந்தியா

தமிழகத்தின் தென் முனையில் உள்ள ஆழ்கடலில் 4 வட்டாரங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க மத்திய அரசு ஏலம்!

தமிழகத்தில் 4 வட்டாரங்களில் எண்ணெய் எடுக்க ஏலம் வழங்கப்பட்டுள்ளது.

Angeshwar G

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதிகளில் மத்திய எரிசக்தி இயக்குநரக சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு தெற்கு கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆழ்கடல் பகுதியில் 4 வட்டாரங்கள் உட்பட நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் இந்த ஏலம் விடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் விருப்பமான இடங்களுக்கு விண்ணப்பிக்க சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆழ்கடல் பகுதியில் 4 வட்டாரங்கள் உட்பட நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் 1,36,596 சதுர கிலோமீட்டர் ஏலம் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் முனையில் உள்ள ஆழ்கடலில் 4 வட்டாரங்கள் முறையே...

1. CY - UDWHP-2022/1 - 9514.63 ச.கி

2. CY - UDWHP-2022/2 - 9844.72 ச.கி

3. CY - UDWHP-2022/3 - 7795.45 ச.கி

4. CY - UDWHP-2023/1 - 5330.49 ச.கி

என மொத்தமாக 32485.29 சதுர கிலோமீட்டர் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு, ஒற்றை அனுமதி முறையில் ஏலம் விடப்பட்டுள்ளது. இன்று 03.01.2024 தொடங்கி 29.02.2024 க்குள் விருப்பமான இடங்களுக்கு விண்ணப்பிக்க சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பானை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த சேதுராமன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, “2014 ஆம் ஆண்டு திறந்த வெளிஅனுமதி என்ற புதிய அனுமதி வந்தது. அதனடிப்படையில் 9 ஆவது சுற்றுக்கான ஏலம் இன்று விடப்பட்டுள்ளது. இதுவரை 8 சுற்று ஏலங்கள் விடுக்கப்பட்டிருந்தது. அது டெல்டா பகுதிகள், விழுப்புரம், இராமநாதபுரம் பகுதிகளில் ஏலம் விடுக்கப்பட்டிருந்தது.

டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருப்பதால் அந்தப் பகுதிகளில் அதற்கான தடையும், ராமநாதபுரத்திலும் எண்ணெய் எடுப்பதற்கான ஆரம்ப கால பணிகள் ஆரம்பிக்க சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகளவில் வேலைவாய்ப்பும், மக்களுக்கு ஆதரவாகவும் இருக்கக்கூடிய பகுதிகள் மீன்வளப் பகுதிகள். அந்த ஆழ்கடல் பகுதியில் 32,485.29 சதுர கிமீ பகுதிகள் நான்கு வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

நான்கு வட்டாரம் முறையே, 9514, 9844, 7795, 7330 சதுர கிமீட்டரில் இந்த பகுதிகள் ஏலத்தில் விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய எரிசக்தி இயக்குநரகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆழ்கடல் பகுதி என்பது மீன்வளத்துடன் இருக்கும் பகுதி. எனவே இது போன்ற திட்டங்கள் மீன்வளத்தை பாதிப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக அரசும் இதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாக இந்த ஆழ்கடல் பகுதிகள் இருக்கிறது. ஏற்கனவே இலங்கை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிப்பதாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதுபோன்ற செயல்பாடுகள் என்னமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசும் மீனவர்களுக்கு விரிவாக சொல்ல வேண்டும். இந்த சர்வதேச அழைப்பானை இன்று தொடங்கி எதிர்வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

மார்ச் ஏப்ரல் மாதத்தில் இது முடிவாக அறிவிக்கப்பட்டு எந்த நிறுவனத்திற்கு இந்த வட்டாரங்கள் கொடுக்கப்பட இருக்கின்றன என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிய வரும்.

ஆழ்கடலில் இம்மாதிரியான விஷயங்கள் எம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஆழ்கடலில் பல்லாயிரக்கணக்கான அடியின் கீழ் நாம் எடுக்கும் போது, கடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதையும் தமிழக அரசு விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதேசமயத்தில் இது தொடர்பாக அச்சம் ஏற்படாத வண்ணம் நாம் செயல்பாடுகளை கொடுக்க வேண்டும் என்பதையும் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.