இந்தியா

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

webteam

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க உள்ளூர் மக்கள் 2 பேர் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவை நியமிக்கவும், குழுவில் இடம்பெறுவோரை தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் தேர்வு செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இது மட்டுமன்றி ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதி வேதாந்தாவின் வேறு எந்த ஆதாயத்திற்காகவும் கிடையாது என்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை கிடையாது, மத்திய அரசே ஆக்சிஜனை பிரித்து வழங்கும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

முன்னதாக, இந்தியாவில் கொரோனா 2-ஆம் அலையால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுவரும் நிலையில், ஆக்சிஜனை தயாரித்து மக்களுக்கு இலவசமாக தர ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளுக்குப் பிறகு, தற்காலிகமாக ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க தமிழக அரசின் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதங்கள் முதலில் முன்வைக்கப்பட்டது. அதில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையைத் திறக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் வேறு எந்தப் பணிகளும் நடைபெறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர், உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் எங்களிடம்தான் ஒப்படைக்கவேண்டும். ஸ்டெர்லைட் ஒப்படைக்கும் ஆக்சிஜனை நாங்கள்தான் மாநிலங்களுக்கு பிரித்துக்கொடுப்போம். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாட்டை பொறுத்து ஆக்சிஜனை பிரித்துக்கொடுப்போம். நேற்றையதினம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதேபோன்ற வழக்கு நடைபெற்றபோது, இக்கட்டான சூழலில் குறிப்பிட்ட நிறுவனம் தயாரிக்கும் ஆக்சிஜன் மத்திய அரசிடம்தான் கொடுக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதே முடிவைத்தான் வேதாந்தா நிறுவன வழக்கிலும் வழக்கறிஞர் முன்வைத்தார்.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பது குறித்த விவரம் மத்திய அரசிடம்தான் உள்ளது எனவும், எனவே மாநில அரசின்வசம் கொடுக்கக்கூடாது எனவும் கூறப்பட்டது.

ஆனால் ஆக்சிஜன் உற்பத்தியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதி, தமிழக அரசிற்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்பட்டால் அம்மாநில அரசின் உயர் நீதிமன்றத்தை அணுகி, குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து இவ்வளவு ஆக்சிஜன் தேவை என்று கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மேலும், அரசின் கண்காணிப்பின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை இயக்கம், நிர்வாகம் இருக்கலாம். அதேசமயம் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிறமாநிலங்களுக்கு விநியோகிப்பதை தடுக்கக்கூடாது என நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.