இந்தியா

"தற்காலிகமாக போரை நிறுத்துங்கள்": உக்ரைன் - ரஷ்யாவிடம் இந்தியா வேண்டுகோள்

"தற்காலிகமாக போரை நிறுத்துங்கள்": உக்ரைன் - ரஷ்யாவிடம் இந்தியா வேண்டுகோள்

Veeramani

யுத்தபூமியான உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்ய இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 48 விமானங்களில் 10 ஆயிரத்து 500 பேர் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உக்ரைனில் இன்னும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இந்தியர்கள் வரை இருக்கலாம் என கருதுவதாகவும் இதில் கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமாக நடக்கும் கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளில் மட்டும் ஆயிரம் பேர் இருக்கலாம் என தெரிவதாகவும் தெரிவித்தார்.

இவர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இரு நாட்டு படைகளிடமும் உள்ளூர் அளவில் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் பக்ஷி கூறினார். கிழக்கு உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்க ரஷ்ய அரசு 130 பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தாலும் அவர்கள் உள்ள இடத்திலிருந்து அவை 50 - 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் போர் நடக்கும் இந்நேரத்தில் அத்தொலைவுக்கு மாணவர்கள் பயணிப்பது பாதுகாப்பாக இருக்காது என்றும் அரிந்தம் பக்ஷி தெரிவித்தார்.

எனினும் மாணவர்களை மீட்க எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும், உக்ரைனில் உள்ள கடைசி இந்திய மாணவரை மீட்கும் வரை ஆபரேஷன் கங்கா திட்டம் தொடரும் என்றும் அரிந்தம் பக்ஷி கூறினார். இதற்கிடையே உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டு வரும் பணியில் ஏர் இந்தியா, இண்டிகோ, கோ ஃபர்ட்ஸ்ட், ஸ்பைஸ்ஜெட் ஆகிய தனியார் விமானங்களுடன் தற்போது ஏர் ஆசியாவும் இணைந்துள்ளது