3வது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று மாலை 4 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய சந்திரசேகர் ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு 6 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இதனிடையே தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சமீபத்தில் சந்தித்து பேசினார். திருவனந்தபுரத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மக்களவை தேர்தல் தொடங்கியபின் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசியல் தலைவரை சந்திரசேகரராவ் சந்தித்து பேசியது அதுவே முதல் முறை.
தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆட்சி அமைய பல மாநில தலைவர்களை சந்திரசேகர் ராவ் சந்திக்க உள்ளார் எனத் தெரிகிறது. அதுமட்டுமின்றி மே 13-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினையும், சந்திரசேகர் ராவ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சந்திரசேகர ராவை சந்திக்க திமுக தலைவர் நேரம் ஒதுக்கவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று மாலை 4 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். 3வது அணியை அமைக்கும் முயற்சியில் ஸ்டாலினை சந்திரசேகர் ராவ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.