இந்தியா

தெலுங்கானா போலீஸை 20 ஆண்டுகாலம் அலைக்கழித்த மரக்கடத்தல் குற்றவாளி கைது !

தெலுங்கானா போலீஸை 20 ஆண்டுகாலம் அலைக்கழித்த மரக்கடத்தல் குற்றவாளி கைது !

webteam

தெலுங்கானாவில் நீண்ட நாட்களாக காவல்துறை மற்றும் வனத்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த செம்மரக் கடத்தல் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவில் நீண்ட காலமாக செம் மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரபல கடத்தல் மன்னன் எட்லா ஸ்ரீனு என அழைக்கப்படும் பொத்தாரம் ஸ்ரீநிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் ராமகுண்டம் காவல்துறையினர் அவரை இரண்டு கூட்டாளிகளுடன் கைது செய்துள்ளனர். அவர் மீது ஆபத்தான செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கூட்டாளிகள் குடுடாலா கிஷான் குமார் மற்றும் கொரவேனா முதுகார் ஆகியோரும் அதே சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநிவாஸ் 1999ஆம் ஆண்டு மஹாமுத்துரம் கிராமத்தில் உர வியாபாரம் செய்தார். அதில் கடும் நஷ்டம் அடைந்த அவர், சிறிய அளவில் மரக்கடத்தல் செய்பவர்களிடம் மரங்களை வாங்கி விற்பனை செய்துள்ளார். குறைந்த விலையில் மரங்களை வாங்கிய அவர், அதிக விலைக்கு விற்று லாபம் கண்டதால் மரக்கடத்தல் மீது ஆர்வம் கொண்டுள்ளார். இதனால் அவரே மரங்களை வெட்டி கடத்தத் தொடங்கியுள்ளார். 10 ஆண்டுகளில் பெரும் மரக்கடத்தல் புள்ளியாகவும் மாறியுள்ளார். அடுத்த 10 வருடங்களில் தெலுங்கானா மட்டுமின்றி, மகாராஷ்ட்ரா மற்றும் சத்தீஸ்கர் வரையிலும் தனது கடத்தல் எல்லையை விரிவு படுத்தியுள்ளார். அவர்மீது மரக்கடத்தல் உள்ளிட்ட 8 வழக்குகளை வனத்துறையினரும், 7 குற்ற வழக்குகளை காவல்துறையினரும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ராமகுண்டம் காவல்துறையினர் மந்தானி என்ற இடத்தில் ஸ்ரீநிவாஸை கைது செய்துள்ளனர். மரக்கடத்தல் கொள்கையர்களை கைது செய்யக்கோரி தெலுங்கானா அரசு பிறப்பித்த உத்தரவின்படி, ராமகுண்டம் காவல் ஆணையர் சத்யநாராயணன் அமைத்த தனிப்படை அவரை கூட்டாளிகளுடன் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒரு 4 சக்கர வாகனம் மற்றும் தேக்குமரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்த பிறகு தான் அவர் பிரபல மரக்கடத்தல் மன்னன் ஸ்ரீநிவாஸ் என்பது தெரியவந்துள்ளது.