இந்தியா

தெலங்கானா அரசியலில் மாறும் 'காட்சிகள்'... பாஜக பக்கம் சாய்கிறாரா சந்திரசேகர ராவ்?!

தெலங்கானா அரசியலில் மாறும் 'காட்சிகள்'... பாஜக பக்கம் சாய்கிறாரா சந்திரசேகர ராவ்?!

webteam

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக 'முதல்' குரல்களை எழுப்பிவந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இப்போது தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருப்பது, அரசியல் ரீதியில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ், கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான கட்சியின் அறிக்கையை வெளியிட்டபோது, தேசிய அளவில் தனது பாஜக எதிர்ப்பை புதுப்பிக்க வேண்டும் என்று சூசகமாக தெரிவித்தார். இப்படி தெரிவித்ததோடு நிற்கவில்லை. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் மீண்டும் ஒருங்கிணைக்க தொடங்கி, 'மோடி அரசின் தொழிலாளர் எதிர்ப்பு மற்றும் விவசாய விரோத கொள்கைகளை அம்பலப்படுத்த டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஹைதராபாத்தில் நாட்டின் அனைத்து பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சிகளின் மாநாட்டை நடத்துவேன்' என்றுகூறி, சந்திரசேகர ராவ் அதற்கு உரிய ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்துவந்தார்.

தொடர்ந்து தான் பங்கேற்கும் கூட்டங்களில், ``வேளாண்மை தொடர்பான கடுமையான சட்டங்களை இயற்றி விவசாயிகளை வேதனைப்படுத்தி வருகிறது பாஜக. எல்.ஐ.சி, ஏர் இந்தியா, நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க முடிவு செய்து, பெரிய தொழிலதிபர்களுக்கு பயனளிப்பதற்காக பல பொதுத்துறை நிறுவனங்களை மூடிவருகிறது பாஜக" என ஆவேசமாக பேசி மோடி அரசைக் கண்டித்தார். கிட்டத்தட்ட இது மோடிக்கு எதிரான சந்திரசேகர ராவின் போர் என்கிற அளவுக்கே செயல்பாடுகள் அமைந்தன.

இந்த எதிர்ப்புகள் அனைத்தும் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையே. ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சியின் செயல்பாடுகள், சந்திரசேகர ராவ்வின் முடிவுகளை மாற்றியுள்ளதா என அம்மாநில அரசியல் நோக்கர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேகத்துக்கு காரணம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு பின்பான சந்திரசேகர ராவின் செயல்பாடுகள். தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு வாரத்தில் டெல்லி விசிட் அடித்த முதல்வர் சந்திரசேகர ராவ், மூன்று நாள் அங்கு தங்கியிருந்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அமைச்சர்களை சந்தித்தார். கிட்டத்தட்ட பாஜக அரசுக்கு நட்புக்கரம் நீட்டுவதுபோல் அவரின் சந்திப்பு இருந்தது.

சந்திரசேகர ராவ் டெல்லியில் இருந்த அதேநேரத்தில், டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டமும் நடந்தது. வேளாண்மை தொடர்பான சட்டங்களை கடுமையாக எதிர்த்த சந்திரசேகர ராவ், விவசாயிகளை சென்று சந்திக்கவில்லை. அந்தப் போராட்டத்தைப் பற்றி வாய்திறக்கவும் இல்லை. அதேபோல் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் பாஜக எதிர்ப்புக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தார். அவர் சொன்ன காலம் முடிந்த நிலையில், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. தற்போது டெல்லியில் இருந்து திரும்பியிருக்கும் அவர், பாஜக எதிர்ப்பு கட்சிகளின் கூட்டத்தை நடத்தும் திட்டம் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மற்ற கட்சித் தலைவர்களை அழைக்கும் முயற்சியைக் கூட அவர் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை மத்திய பாஜக அரசு விமர்சித்தபோது, அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் சந்திரசேகர ராவ். சமீபத்தில் மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் மத்திய பாஜக அரசு மீது சர்ச்சை எழுந்தபோது, பாஜக அல்லாத முதல்வர்கள், ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், மம்தாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். ஆனால், சந்திரசேகர ராவ் இன்று வரை இந்த விவகாரம் தொடர்பாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மாதிரியான செயல்கள்தான், சந்திரசேகர ராவ் மாறுகிறார் என்பதை உணர்த்துகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முன்னாள் செவெல்லா நாடாளுமன்ற உறுப்பினர் கோண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி தனது ட்வீட்டில் இதை சுட்டிக்காட்டியுள்ளார். ``ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசுக்கு ஆதரவாக ஸ்டாலின், கேப்டன் அமரீந்தர் சிங், அரவிந்த் கெஜ்ரிவால், பூபேஷ் பாகேல் மற்றும் அசோக் கெஹ்லோட் போன்றோர் இருந்தபோது சந்திரசேகர ராவ் எங்கே சென்றார். அவர் பாஜகவைப் பார்த்து பயந்துவிட்டார் என்று நினைக்கிறேன். கே.சி.ஆர் மம்தாவை ஆதரித்தாரா? இல்லை. அவரது கூட்டாட்சி முன்னணிக்கு என்ன நடந்தது?" என்று கேள்விகளைத் தொடுத்திருந்தார்.

அடுத்தடுத்த சில ட்வீட்களில், ``உண்மையில் சந்திரசேகர ராவை விட, மம்தா விரைவில் கொல்கத்தாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்துவார். அவர் அனைத்து பாஜக எதிர்ப்பு தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மம்தா ஒருபோதும் சந்திரசேகர ராவ்வை நம்பவில்லை. அதில் சந்தேகமில்லை. பாஜக மற்றும் டிஆர்எஸ் பரஸ்பர புரிதலில் உள்ளன. அவர்களின் குறிக்கோள் மக்களை முட்டாளாக்குவது மட்டுமே" என்று விமர்சித்துள்ளார்.

இவர் மட்டுமல்ல, இன்னும் சில அரசியல் தலைவர்களும் நேரடியாக சந்திரசேகர ராவின் சமீபகால செயல்பாடுகளை சுட்டிக்காட்டி அவர் பாஜக பக்கம் சாய்கிறாரா என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர். இதற்கு சந்திரசேகர ராவ் பதில் கொடுத்தால் மட்டுமே வெளிச்சம்!

- மலையரசு