ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹைதராபாத் அருகே, கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொன்றதாக கைது செய்யப்பட்ட 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இந்நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலங்கானா தலைமைச் செயலாளர் எஸ்.கே.ஜோஷி பிறப்பித்துள்ள உத்தரவில், டிஜிபியின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு, கால்நடை மருத்துவரின் கொலை மற்றும் என்கவுன்ட்டர் குறித்து விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் எம். பகவத் தலைமையிலான குழுவில், 7 காவல் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே, தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர், ஹைதராபாத்தில், கால்நடை மருத்துவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் வசித்து வரும் சிலர், கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது மனித உரிமை ஆணையம் எங்கே சென்றது என கேள்வி எழுப்பினர்.