இந்தியா

”சம்மர் வந்தாச்சு இந்த பிராண்ட்ல விற்க சொல்லுங்க” - பீர் கேட்டு கலெக்டரிடம் மனு

”சம்மர் வந்தாச்சு இந்த பிராண்ட்ல விற்க சொல்லுங்க” - பீர் கேட்டு கலெக்டரிடம் மனு

JananiGovindhan

காவல்துறையிடமும், அரசு அதிகாரிகளிடமும் மதுபானம் கேட்டு ரகளை செய்வது தெலங்கானாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு பிடித்தமான பிராண்டின் பீர் தான் வசிக்கும் ஊரில் கிடைப்பதே இல்லை எனக் கூறி புகார் ஒருவர் மனு கொடுத்திருக்கிறார்.

தெலங்கானாவின் ஜக்டியல் மாவட்ட ஆட்சியர் பிரஜாவாணி என்பதன் பெயரில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பீராம் ராஜேஷ் என்ற நபர்தான் கலெக்டரிடம் பீர் கேட்டு மனு கொடுத்திருக்கிறார்.

அதன்படி பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சென்று கிங் ஃபிஷர் பிராண்ட் பீர் கிடைப்பதே இல்லை எனச் சொல்லியிருக்கிறார். இது தொடர்பான ராஜேஷின் புகார் மனுவில், “கோடைகாலம் தொடங்கிவிட்டது. விரைவில் பீருடன் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒயின் ஷாப்களில் எல்லா நிறுவன பீர்களும் விற்கப்பட வேண்டும்.

ஆனால், மதுக்கடைகளில் தரம் குறைந்த, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பீர்களையே விற்கிறார்கள். இதுப்போன்ற பீர்களை குடிப்பதால் எங்கள் ஆரோக்கியம்தான் கெடுகிறது. எனவே, தயவுசெய்து இது தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். பொதுமக்கள் குறைதீர் கூட்டம் என்றதும், தனக்கு கிங் ஃபிஷர் பீர் கிடைக்காததும் ஒரு குறைதான் என எண்ணி பீராம் ராஜேஷ் கடிதம் கொடுத்திருக்கிறார் என விமர்சிக்கப்பட்டிருக்கிறது.

இதுப்போன்று பல முறை தெலங்கானாவில் நடந்திருக்கிறது. அதன்படி, கடந்த 2018ம் ஆண்டு கிங் ஃபிஷர் பீர் விற்கச் சொல்லி ஜக்டியலைச் சேர்ந்த அயிலா சூர்யநாராயாண என்பவர் கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார்.

அதில் ஒயின் ஷாப், பார் ஓனர்கள் கிங் ஃபிஷர் பீருக்கு பதிலாக தரமற்ற பீர்களை விற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள். கரிம்நகர் டவுனில் கிங் ஃபிஷர் பீர் கிடைக்கும் போது ஜக்டியலில் மட்டும் விற்கப்படாதது ஏன் என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.

அடுத்தபடியாக, கடந்த ஆண்டு விக்கராபாத் டவுனை சேர்ந்த மது என்பவர், அவசர அழைப்பு எண்ணான 100க்கு நள்ளிரவு 2.30 மணியளவில் தொடர்புகொண்டு விவரம் எதுவும் தெரிவிக்காமல் அவசர உதவி எனச் சொல்லி போலீசாரை வரவைத்திருக்கிறார்.

அழைப்பை அடுத்து அவரது வீட்டுக்குச் சென்ற போலீசிடம் கூலிங்காக பீர் வாங்கி வரச் சொல்லி கேட்டிருக்கிறார் அந்த மது. இதனால் அவசர தேவை என நினைத்து சென்ற போலீசார் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.