லாஸ்யா நந்திதா, ரேவந்த் ரெட்டி புதிய தலைமுறை
இந்தியா

10 நாளில் மீண்டும் விபத்து- தெலங்கானா MLA மரணம்! வாகன ஓட்டுநர்கள் தொடர்பாக அரசு எடுத்த அதிரடி முடிவு

தெலங்கானாவில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Angeshwar G

நேற்று முன்தினம் தெலங்கானாவில் நடந்த சாலை விபத்தில் செகந்திரபாத் கண்டோன்மெண்ட் தொகுதியை சேர்ந்த பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மரணமடைந்திருந்தார். 37 வயதான இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

லாஸ்யா நந்திதா

ஐந்து முறை கண்டோன்மெண்ட் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த மறைந்த ஜி.சயன்னாவின் மகள்தான், லாஸ்யா நந்திதா. சயன்னா மறைந்த பின் கண்டோன்மெண்ட் தொகுதி வேட்பாளராக லாஸ்யா நந்திதாவை அறிவித்தார் அப்போதைய முதலமைச்சரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ். இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கட்சித்தலைமை தன் மீது வைத்த நம்பிக்கையை தன் வெற்றி மூலம் காப்பாறியிருந்தார் நந்திதா. அதன்படி பாஜக வேட்பாளர் என்.கணேஷை 17,169 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார். இந்நிலையில்தான் தற்போது அவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி பேரணியொன்றில்ல் பங்கேற்றுவிட்டு ஹைதராபாத்திற்கு திரும்பும்போது மரிகுடா சந்திப்பில் சாலை விபத்தில் சிக்கியிருந்தார் அவர். ஆனால் நல்வாய்ப்பாக உயிர்தப்பி இருந்தார். அச்சமயத்தில் குடிபோதையில் கார் ஓட்டி வந்த நபர் ஒருவர் இவரது வாகனத்தின் மீது மோதி இருந்தார்.

அந்த விபத்தில் இவர் உயிர் தப்பிய நிலையில், அதுநடந்த அடுத்த 10 நாட்களுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (அதாவது பிப்ரவரி 23 ஆம் தேதி) படன்சேரு அருகே, அதிகாலை 5.30 மணியளவில் எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சென்றுகொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து கார் பக்கவாட்டு தடுப்பில் மோதியதில், லாஸ்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது எஸ்.யூ.வி வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்திருந்தது.

காரை ஓட்டிய எம்.எல்.ஏ.வின் தனி உதவியாளர் ஆகாஷ், “காலையில் இருட்டாகவும் பனிமூட்டமாகவும் இருந்தது. நான் சில நொடிகள் தூங்கிவிட்டேன். அதனாலேயே விபத்து ஏற்பட்டது” என தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் - லாஸ்யா

விபத்து நடந்த உடன் ஆகாஷ் தனது சகோதரி மற்றும் உறவினரிடம் விபத்து நடந்ததையும், காருக்குள் எம்.எல்.ஏ இருந்ததையும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

காவல்துறையினர் இதுகுறித்து கூறுகையில், “எம்.எல்.ஏ சீட் பெல்ட் அணிந்திருந்தார். ஆனாலும் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் உடனடியாக வரவழைக்கப்பட்ட நிலையில், ஆகாஷ் மியாபூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். லாஸ்யாவிற்கு அப்போதே இதயத்துடிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

தொடர்ந்து படன்செருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரும் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் தற்போதுவரை சிகிச்சையில் இருக்கும் ஆகாஷின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

லாஸ்யா நந்திதா கார் விபத்து

எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா உயிரிழந்த 2 நாட்களுக்குப் பின் (இன்று), இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், “அனுபவமில்லாத ஓட்டுநர்களால் சாலை விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. தொலைதூரப் பயணங்களுக்காக திறமையான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில்கொண்டு, ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநர் சோதனை நடத்துவதற்கான பயிற்சி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் எம்.எல்.ஏ மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது காரினை ஓட்டிய அவரது தனி உதவியாளரின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.