தெலங்கானாவில் 4 பேர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மறு பிரேத பரிசோதனை நடத்த அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் கடந்த 6ஆம் தேதி அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களும் காந்தி மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.