இந்தியா

அதிரடி காட்டும் தெலங்கானா: 20 நாட்களில் தயாரான தற்காலிக மருத்துவமனை!

அதிரடி காட்டும் தெலங்கானா: 20 நாட்களில் தயாரான தற்காலிக மருத்துவமனை!

webteam

தெலங்கானாவில் 14 மாடிகள் கொண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் ஆயிரத்து 752 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது இதுவே முதன் முறையாகும். இதனிடையே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 814 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 723 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகளும் கொரோனாவை ஒழிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் தெலங்கானா அரசு விளையாட்டு அரங்கம் ஒன்றை தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளது. கச்சிபவுலி மைதானத்தில் உள்ள 14 மாடிக் கட்டடத்தை 20 நாட்களில் தற்காலிக மருத்துவமனையாக தெலங்கானா அரசு மாற்றியுள்ளது. சுமார் 1000க்கும் அதிகமான ஊழியர்கள் இதற்காக உழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 1500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 50 ஐசியூ படுக்கைகளும் அடங்கும்.

சீனாவில் கொரோனா பரவியபோது 10 நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உருவாக்கப்பட்ட நிலையில் தெலங்கானா அரசு 20 நாட்களில் 1500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை உருவாக்கியுள்ளது.