இந்தியா

முதல் நாள் விருது, மறுநாள் லஞ்சம்: பிடிபட்டார் போலீஸ்காரர்!

webteam

கடுமையாகவும் நேர்மையாகவும் பணியாற்றியதற்காக விருது பெற்ற போலீஸ்காரர், மறுநாளே ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பிடிபட்டார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் காவலர் பல்லே திருப்பதி ரெட்டி. இவர், அர்ப்பணிப்புடன் கடுமையாக பணி செய்ததற்காக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி இவருக்கு சிறந்த காவலர் விருதை தெலங்கானா அரசு வழங்கியது.

இந்நிலையில் விருது வாங்கிய மறுநாள் ரமேஷ் என்பவரிடம் ரு.17 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கிய போது, ஊழல் தடுப்புப் பிரிவினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.


ரமேஷ் என்பவரிடம் கடந்த சில மாதங்களாக லஞ்சம் கேட்டு வந்ததாகவும் தரவில்லை என்றால் பொய் வழக்கில் கைது செய்து உள்ளே தள்ளிவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவுக்கு இதுபற்றி தகவல் சொன்னார் ரமேஷ். அவர் சொன்ன படி, 17 ஆயிரம் ரூபாயை ரெட்டியிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி பேண்டின் பின் பக்க பாக்கெட்டில் வைத்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

முதல் நாளில் விருது வாங்கிவிட்டு மறுநாளே லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.