இந்தியா

வளர்ப்பு மகளுக்கு திருமணம்: தந்தை ஸ்தானத்தில் கடமைகளை நிறைவேற்றிய சந்திரசேகர ராவ்!

வளர்ப்பு மகளுக்கு திருமணம்: தந்தை ஸ்தானத்தில் கடமைகளை நிறைவேற்றிய சந்திரசேகர ராவ்!

webteam

2015-ல் ஹைதராபாத் நகர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண் ஒருவர் தனது சித்தி, தந்தையால் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அப்போது முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி பிரதியுஷா என்ற அந்த இளம்பெண்ணை அதிகாரிகள் மீட்டனர். பல கொடுமைகளை அனுபவித்து இருந்த பிரதியுஷாவின் உடலில் சூடுபட்ட காயங்கள், கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரதியுஷாவின் சித்தி ஷியாமளா, தந்தை ரமேஷ் ஆகியோரை கைது செய்த போலீஸ் அவர்களை சிறையில் அடைத்தது. மோசமான நிலையில் இருந்த பிரதியுஷாவை நேரில் சந்தித்த தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் அவரின் மனைவி ஷோபா, மகள் கவிதா அவரை அரசு காப்பகத்தில் சேர்த்து தேவையான உதவிகளை செய்தனர்.

இதன்பின் சில நாட்களில், சந்திரசேகர் ராவ், ``எனக்கு எனது மகள் கவிதா இருக்கிறார். எனினும் பிரதியுஷாவை இன்னொரு மகளாக தத்தெடுக்கிறேன்" என்று அறிவித்து தத்தெடுத்ததார்.

அரசின் காப்பகத்தில் தங்க வைத்தாலும், கடந்த 5 ஆண்டுகளாக பிரதியுஷா படிக்க வைத்து வந்தார் சந்திரசேகர ராவ். அதன்படி, செவிலியர் படிப்பு முடித்து தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார் பிரதியுஷா. சில ஆண்டுகளாக பணிபுரிந்த வந்த நிலையில் பிரதியுஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தார் முதல்வர் சந்திரசேகர ராவ். அதன்படி, சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐடி பொறியாளர் சரண் என்பவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்து நிச்சயம் முடித்தார்.

இந்த நிலையில், பிரதியுஷா - சரண் திருமணம் ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. பிரதியுஷா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், பட்டிகடா பகுதியில் உள்ள தேவாலாயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு முந்தையநாள் நடந்த சடங்குகளில் முதல்வரின் மனைவி ஷோபா, பிரதியுஷாவுக்கு நகைகளை அணிவித்தார். திருமணத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தெலங்கானா அரசின் குழந்தைகள் நலத்துறை சார்பில் செய்யப்பட்டது.