இந்தியா

“உயிர் போனால் மீட்க முடியுமா? ஊரடங்கை நீட்டியுங்கள்” - தெலங்கானா முதல்வர் கோரிக்கை

“உயிர் போனால் மீட்க முடியுமா? ஊரடங்கை நீட்டியுங்கள்” - தெலங்கானா முதல்வர் கோரிக்கை

webteam

ஊரடங்கு உத்தரவு வரும் 14-ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அதை மேலும் நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இருந்தாலும் இந்தியாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார். போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத நம் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது கடினம் என்றும் எனவே ஊரடங்கை நீட்டிப்பதே நல்ல முடிவாக இருக்கும் என்றும் சந்திரசேகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார். ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு மட்டுமே ஏற்படும். அதிலிருந்து மீண்டு விடலாம் ஆனால் உயிர்கள் போனால் மீட்க முடியுமா என்றும் தெலங்கானா முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் அதை எதிர்கொள்ள ஊரடங்கு மட்டுமே அரசிடம் இருக்கும் ஒரே ஆயுதம் என சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். எனவே எந்த தயக்கமும் இன்றி ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.