தெலங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை எடுத்துக் கொடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் முனுகோடே சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி, சமீபத்தில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்காக அமித்ஷா நேற்று ஹைதராபாத் வந்திருந்தார்.
அங்கு பிரச்சாரச் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், “தெலுங்கானா மாநிலத்திற்கு மத்திய அரசு 2 லட்சம் கோடி ரூபாய் வழங்கியப் பிறகும், மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிரானது. சந்திரசேகர் ராவின் குடும்ப உறுப்பினர்களைத் தவிர, மாநிலத்தில் எந்த இளைஞருக்கும் அவரது அரசு வாக்குறுதி அளித்தபடி வேலை கிடைக்கவில்லை” என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்.
அங்கு பிரச்சாரம் முடிந்தப் பின்னர், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆரை, நட்சத்திர ஓட்டல் ஒன்றில், சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. முன்னதாக செகந்திரபாத்தில் உள்ள உஜ்ஜைனி மகாகாளி கோவிலுக்கு சென்று அமித்ஷா வழிபட்டார்.
பின்பு கோவிலைவிட்டு அமித்ஷா வெளியே வந்து காரில் ஏறி செல்வதற்காக கோயில் வாசலில் இருந்த தனது காலணியை அணியச் சென்றார். அப்போது வேகவேகமாக அவருக்கு முன்னதாக சென்று, தெலங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை கையில் எடுத்துக்கொடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வெளியானநிலையில், தெலங்கானாவை ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சி இந்த சம்பவத்தை வைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது.
தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) தலைவர் கே.டி.ராமராவ் இந்த வீடியோவை ட்வீட் செய்து, பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரை கடுமையாக சாடியுள்ளார். குஜராத் தலைவர்களின் 'அடிமை' என்றும் அவரை முத்திரை குத்தியுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி காலணிகளை சுமக்கும் குஜராத்தி அடிமைகளை தெலங்கானா மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெலங்கானாவின் "சுயமரியாதையை" இழிவுப்படுத்தும் எந்த முயற்சியையும் மக்கள் முறியடிப்பார்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.
அத்துடன் தெலங்கனாவில் உள்ள அனைத்து சமூகப் பிரிவினரும் மாநிலத்தின் சுயமரியாதையை அவமதிப்பவர்களை நிராகரிக்கவும், சுயமரியாதையை பாதுகாக்கவும் தயாராக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தெலங்கானா காங்கிரஸ் கட்சியும் எம்.பி. பண்டி சஞ்சய் குமாரின் செயலை விமர்சித்துள்ளது. மேலும் பாஜகவில் பிற்படுத்தப்பட்டவர்களின் உண்மை நிலை இதுதான் என்றும் கூறியுள்ளது.