சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரும் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.
தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ள இந்த கடிதத்தில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசு அதற்கான உரிய காரணத்தை தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு அவர் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உட்பட பீகாரை சேர்ந்த 11 கட்சி தலைவர்கள் கூட்டாக பிரதமரை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைத்து இருந்தனர்.