சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான ஐவர் ட்விட்டர்
இந்தியா

உத்தரகாண்ட்: பேருந்தில் சென்ற சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்!

உத்தரகாண்ட்டில் பஞ்சாப் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்த மைனர் பெண் ஒருவரை பேருந்தில் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எப்பொழுதுதான் முடிவை எட்டும்? என்பதே, எல்லோரின் கேள்வியும். அதற்கு இன்னும் வலுசேர்த்துள்ளது, மற்றுமொரு சம்பவம்.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அச்சம்பவத்தை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள்கள் அரங்கேறி கொண்டுதான் வருகிறது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மைனர் பெண் ஒருவர் (18 வயதுக்கு உட்பட்டவர்) கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி பஞ்சாப் டெல்வதற்காக பேருந்தில் புறப்பட்டுள்ளார். இதற்காக முதலில் அவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து முதலில் டெல்லி சென்றுள்ளார்.

இதனையடுத்து, டெல்லி காஷ்மீரி கேட் நிலையத்தை அடைந்த அவர், பஞ்சாப் எவ்வாறு செல்லது என தெரியாமல், அங்கே நின்று கொண்டிருந்த நடத்துநர் தேவேந்திரன் என்பவரிடம் விசாரித்துள்ளார். இதற்கு பதிலளித்த தேவேந்திரன், முதலில் டேராடூனுக்கு பேருந்தில் செல்ல வேண்டும் எனவும், அங்கிருந்து பஞ்சாப் நோக்கி மற்றொரு பேருந்தில் செல்ல வேண்டும் எனவும் கூறி தனது பேருந்திலேயே ஏற்றியுள்ளார்.

பேருந்து உத்தரகாண்ட்டின் டேராடூனை அடைந்தவுடன் சிறுமியை தவிர அனைத்து பயணிகளும் பேருந்திலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அப்போது பேருந்தில் இருந்த நடத்துநர் தேவேந்திரனும், ஓட்டுநர் தர்மேந்திராவும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை தொடரந்து, சத்தம்கேட்டு வந்த அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் இரண்டு டிரைவர்களான ரவி குமார் மற்றும் ராஜ்பால் சிங் ஆகியோரும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து, அன்றைய தினம் கிடைத்த பணத்தை டெபாசிட் செய்வதற்காக காசாளர் ராஜேஷ் சோன்கரிடம் சென்ற தேவேந்திரன், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர், அந்தக் கொடூரனும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

பின் டேராடூன் ISBT பேருந்து முனையத்தில் உள்ள பெஞ்ச் ஒன்றில் சிறுமியை விட்டுவிட்டு இவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். அங்கு அவர் தனியாக அமர்ந்திருந்ததை கண்ட டேராடூன் குழந்தைகள் நலக்குழு, போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளது. இதனையடுத்து, பால் நிகேதன் என்ற அரசு பெண்கள் இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட அச்சிறுமியிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதலில் மிகவும் அதிர்ச்சியில் இருந்த சிறுமி எதுவும் கூறாத சூழலில், மனநல ஆலோசனை எடுத்துக்கொண்டபின் தான் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை போலீசாரிடத்தில் தெரிவித்துள்ளார். இதன்பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தொடர்ந்து, CWC அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 70 (2) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் படேல் நகர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர், போலீசார் விரைந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதிலுள்ள நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

கைதானவர்களின் விவரம்:

கைதானவர்கள் மற்றும் சம்பவம் நடந்த பேருந்து

இதனால்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள புக்காவாலாவில் வசிக்கும் தர்மேந்திர குமார் (32) மற்றும் ராஜ்பால் (57);

ஹரித்துவாரில் உள்ள பகவான்பூரில் வசிக்கும் தேவேந்திரா (52);

டேராடூனில் வசிக்கும் ராஜேஷ் குமார் சோன்கர் (38);

மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (34)

ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட பேருந்தினையும் பறிமுதல் செய்துள்ளனர்.