ஓவர் ஸ்பீடில் ஓட்டிவந்த காரை நிறுத்த முற்பட்ட ட்ராபிக் போலீஸை இடித்து 1 கி.மீ காரின் போன்னட்டில் இழுத்தச்சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பையிலிருந்து கிட்டத்தட்ட 60 கி.மீ தொலைவிலுள்ள புறநகர் பகுதியான வசாயில் சோம்நாத் சவுத்ரி என்ற போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் அங்குவந்த கார் ஒன்றை அவர் நிறுத்த முற்பட்டபோது சோம்நாத் மீது மோதியது மட்டுமின்றி, கிட்டத்தட்ட 1 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் அவரை இழுத்துச் சென்றுள்ளது. காரின் முன்பகுதியில் மாட்டிய சோம்நாத்தை காப்பாற்ற போலீசார் அந்த காரை தொடர்ந்துள்ளனர். ஒருவழியாக ட்ராபிக்கில் மாட்டிய காரை தடுத்து நிறுத்திய போலீசார் காரை ஓட்டிவந்த நபரை கைதுசெய்தனர்.
உத்தர பிரதேச வாகன எண்ணக்கொண்ட அந்த காரை ஓட்டியவரிடம் விசாரித்ததில் அவர் 19 வயது இளைஞர் எனவும், அவரிடம் லைசன்ஸ் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இந்திய மோட்டார் வாகன சட்டப்பிரிவுகள் 307, 308 மற்றும் 353-இன் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரின் முன்பகுதியில் போலீசார் மாட்டி இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.