இந்தியக் கொடி முகநூல்
இந்தியா

என்னது Coding பயன்படுத்தி இந்தியக் கொடி வரையணுமா? நேர்க்காணலே வேணாமென வெளியேறிய பெண்! என்ன நடந்தது?

CSS-ஐ (CSS என்பது HTML போல ஒரு கணினி Language) பயன்படுத்தி இந்தியக் கொடியை வரையச் சொன்னதால் நேர்காணலில் இருந்து வெளியேறிய தொழில்நுட்ப வல்லுநர், சமூக வலைதளப்பக்கத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தியக் கொடியை வரையச் சொன்னதால் நேர்காணலில் இருந்து வெளியேறிய தொழில்நுட்ப வல்லுநர், சமூக வலைதளப்பக்கத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்திருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்...

தொழில்நுட்ப துறையில் பத்து வருடங்களுக்கும் மேலான அனுபவத்தை பெற்றிருந்த பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர், நேர்க்காணலுக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு நேர்ந்த அனுபவத்தை Reddit என்ற சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது இணையதளத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்தப் பதிவில் அப்பெண், “இன்று நான் எனது வீட்டின் அருகில் இருந்த நிறுவனம் ஒன்றில் நேர்க்காணலுக்கு சென்றிருந்தேன். எனக்கு angular, java script, typescript, HTML, CSS, போன்றவற்றில் 10 வருடங்கள் அனுபவம் இருக்கிறது. எனவே, அந்த வேலைக்காக நேர்க்காணல் சென்றிருந்தேன்.

பொதுவாக இதுபோன்ற பணிக்கான நேர்க்காணலில், வேலையில் உள்ள அனுபவம், நிஜ வாழ்க்கையோட தொடர்புப்படுத்தி சில கேள்விகள், லாஜிக்கல் திங்கிங் போன்றவை கேட்பது வழக்கமான ஒன்று. ஆனால், என்னை நேர்க்காணல் செய்த நெறியாளர் எனது அறிவை சோதித்தறிய விநோதமான முறையில் என்னிடம் கேள்விகளை எழுப்பினார்.

ஆரம்பத்திலேயே, css பற்றிய theoretical கேள்விகளை கேட்க தொடங்கினார். அப்பொழுதே நேர்காணல் எதிர்பாராத பாதையில் சென்றது. ஒருகட்டத்தில் என்னை CSS-ஐ (CSS என்பது வலைப்பக்கத்தை / டாக்குமெண்ட்களை வடிவமைக்க பயன்படுத்தும் System Language. HTML போல இதொரு வடிவம்...) பயன்படுத்தி இந்தியக் கொடியை வரையச் சொன்னார். நானும் வரைய தொடங்கினேன். எனக்கு கேட்கப்பட்ட இந்த கேள்வி மிகவும் அபத்தமானது. இருப்பினும் செய்தேன். ஆனால் நான் அதை முடித்தப் பிறகு நேர்க்காணல் செய்த பெண், என்னை அசோகச் சக்கரத்தையும் வரையச் சொன்னார்; நான் அதையும் வரைந்தேன். மீண்டும் அந்த சக்கரத்தில் உள்ள கூர் முனைகளை வரையச் சொன்னார். ஆனால், அப்பொழுதுதான் நான் எனது பொறுமையை இழந்தேன்...” என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில், “நீங்கள் ஒரு Front-End Developerஆக இருந்து, இது போன்ற கேள்விகள் உங்களுக்கு கேட்கப்பட்டு இருந்தால், அர்த்தமற்றது என்றுதான் நீங்களும் நினைத்திருப்பீர்கள். உண்மையை கூறவேண்டுமானால், இதுப்போன்ற கேள்விகளை நாங்கள் கல்லூரி செய்முறை தேர்வில்தான் பார்த்திருக்கிறோம். இது என்னை மிகவும் எரிச்சலூட்டியது.. இதன்காரணமாகவே, நான் ’வேலையே வேண்டாம்’ என்று வெளியேறிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்பதிவுக்கு கீழே பலர் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தையும் தெரிவித்து வருகின்றனர். இதனால், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான ஒன்றாக மாறியுள்ளது.