இந்தியா

சுவர்களே கரும்பலகை... வான்வெளியே வகுப்பறை... மகாராஷ்டிராவில் செயல்படும் புதுமைப் பள்ளிகள்

webteam

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நகரங்கள் மற்றும் வசதியான கிராமங்களில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மின்சார வசதிகூட இல்லாத கிராமங்களில் படிக்கும் மாணவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கும் தீர்வு வைத்திருக்கிறது இந்த ஊர்.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் உள்ள வீட்டுச்சுவர்களில் பாடங்களை வரைந்து பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்கள் ஆசிரியர்கள். இங்குள்ள நிலம் நகரில் உள்ள 300 வீட்டுச் சுவர்களில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடங்களை படங்களாக வரைந்துள்ளார்கள்.

எளிமைப்படுத்தப்பட்ட பாடங்களில் இருந்து முக்கியமான பகுதிகளை மாணவர்களுக்குப் புரியும் வகையில் ஓவியங்களாகத் தீட்டி கற்பிக்கப்படுகிறது. நிலம் நகரைச் சேர்ந்த ஆஷா மராத்தி வித்யாலயா தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராம் கெய்க்வாட், "இந்த சுவர் பாடங்கள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கின்றன. சமூக இடைவெளியில் நின்று அவர்கள் படிக்கிறார்கள் " என்கிறார்.

இங்குள்ள தொடக்கப்பள்ளியில் 1700 மாணவர்கள் படிக்கிறார்கள். அனைவருமே ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கு வந்து படிப்பதே பெருங்கனவாக இருந்து வருகிறது.

(கோப்புப் படம்)

"கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நல்ல இணைய வசதிகள் வேண்டும். பெரும்பாலான பெற்றோர்களிடம் ஸ்மார்ட் ஃபோன்கள் கிடையாது. இவர்களுக்கு ஆன்லைன் என்பது தொலைதூரத்துக் கனவாக இருக்கிறது " என்கிறார் ஆசிரியர் கெய்க்வாட்.

இந்த மாணவர்களுக்கு ஆன்லைன் இல்லாத குறையை வீட்டுச் சுவர்கள் தீர்த்துவைக்கின்றன. எழுத்துகள், எண்கள், வார்த்தைகள், இலக்கணம், கணித சூத்திரங்கள், பொது அறிவு உள்ளிட்ட எளிமையான பாடங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளன.