ஆக்ரா முகநூல்
இந்தியா

உ.பி | ‘உன் மகளின் பாலியல் ஸ்கேண்டல் வீடியோ இருக்கு..’ ஆன்லைன் போலி அழைப்பால் பறிபோன ஆசிரியை உயிர்!

”உங்களின் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்” என்று வந்த போலி அழைப்பால், ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பம் பெரும் மக்களிடையே அதிர்ச்சியையும், ஆன்லைன் மோசடி குறித்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

”உங்களின் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்” என்று வந்த போலி அழைப்பால், ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பம் பெரும் மக்களிடையே அதிர்ச்சியையும், ஆன்லைன் மோசடி குறித்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அச்நேராவில் உள்ள ஜூனியர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர், 58 வயதான மால்தி வர்மா என்னும் பெண். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

போலி அழைப்பு

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மதியம் 12மணியளவில், மால்திக்கு வாட்ஸ்அப் கால் ஒன்று வந்துள்ளது. அதில், ”உங்கள் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, போலீஸில் பிடிப்பட்டிருக்கிறார். .உடனடியாக நான் கூறும் வங்கி கணக்கில் ரூ 1 லட்சம் பணம் செலுத்த வேண்டும் இல்லையெனில் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் “ என்று மிரட்டியுள்ளார்.

மோசமடைந்த மால்தியின் உடல்நிலை

மேலும், கிட்டதட்ட 15 நிமிடங்களில் 10 முறை அந்த மிரட்டல் கால் வந்துள்ளது. இதனையடுத்து, மிகுந்த பயமும், அச்சமும் அடைந்த மால்தி தனது மகனுக்கு இதை குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், வாட்ஸ் அழைப்பு வந்த போன் நம்பரை மால்தியின் மகனான ராஜ்புத் சோதிக்கவே, அது பாகிஸ்தானிலிருந்து வந்த ஸ்கேம் கால் என்றும் அதனால் நம்பர் பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறுயுள்ளார்.

பின்னர், தனது 20 வயதான சகோதரிக்கு கால் செய்து பேசிய ராஜ்புட், அவர் கல்லூரியில் பத்திரிமாக இருக்கிறார் என்பதை உறுதி செய்துவிட்டு அதையும் தனது தாயிடத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், இதன்பிறகும் மால்தியின் கவலை தீராமல் இருந்துள்ளது. இதன்காரணமாகவே, மால்தியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.. இறுதியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டிபியில் இருந்து போலீஸ் புகைப்படம்

மகன் ராஜ்புத் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், “ எங்களின் அம்மாவிற்கு இதயம் சார்ந்த எந்த பிரச்னையும் இல்லை. அம்மாவிற்கு போலி அழைப்பு விடுத்தவரின் வாட்ஸ் அப் டிபியில் போலீஸ் உடை அணிந்த ஒருவரின் புகைப்படம் இருந்தது ” என்று தெரிவிக்கிறார்.

தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மால்தியின் கணவர்,இது குறித்து தெரிவிக்கையில், “ இந்த கால் வந்த பிறகு மால்தி மிகவும் கவலையுடன் இருந்தார். இதனையடுத்து, உடல் நிலை மோசமாக மாறியது..பின்னர் நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.. மால்தியை சோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக மால்தி மரணமடைந்து விட்டார் என்று தெரிவித்தனர்.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், போலி அழைப்பு தொடர்பாக மால்தியின் குடும்பம் போலீஸில் புகார் அளித்த நிலையில், தற்போது விசாரணை நடைப்பெற்று வருகின்றது.

விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இது குறித்து டிசிபி சூரஜ் பேசுகையில், "ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு ஜகதீஷ்புராவில் உள்ள காவல்துறையினரால் விரிவாக விசாரிக்கப்படுகிறது. காவல்துறையினர் ஆசிரியர் மால்தி வர்மாவின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்து வருகிறோம். அழைப்புகள் செப்டம்பர் 30 ஆம் தேதி வந்துள்ளன. மேலும் வந்த எண் எந்த வகையான அழைப்பு என்பதையும் பரிசீலிக்கிறோம், மேலும், ஆசிரியர் எந்த சூழ்நிலையில் இறந்தார் என்பதைக் கண்டறிய முயற்சிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் மோசடி புகார்கள், மோசடி கால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அநியாயமாக ஒருவரின் உயிர் பறிபோய் இருப்பது மக்களிடையே பாதுகாப்பு குறித்தான மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.