இந்தியா

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்

PT

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் மீது ஏற்றுமதி வரி விதித்துள்ளது. இதனால் ஏற்றுமதியை குறைத்து ரிலையன்ஸ் உள்ளிட்ட எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டிலே அதிக அளவில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நடவடிக்கை மூலம் எரிபொருள் விலை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் கூடுதல் லாபத்தில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்படுகிறது. தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்தால், புதிய வரி மறுபரிசீலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் "விண்ட்பால் டாக்ஸ்" என அழைக்கப்படும் வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி மீதான வரி தவிர, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,250 (சிறப்பு கூடுதல் கலால் வரி மூலம்) சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக அதிகரித்து வருகிறது. உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், சர்வதேச விலைக்கு ஏற்ப உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்கின்றனர். இதனால் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் அதிகளவில் லாபம் ஈட்டி வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,250 செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு இந்த செஸ் வரி விதிக்கப்படாது. இந்த செஸ் வரி உள்நாட்டு பெட்ரோல், எரிபொருள் விலைகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், நிதியாண்டில் ஆண்டுக்கு 2 மில்லியன் பீப்பாய்களுக்கு குறைவாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் சிறு உற்பத்தியாளர்களுக்கு இந்த செஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், முந்தைய ஆண்டைவிட கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு, கூடுதல் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக செஸ் வரி விதிக்கப்படாது.

பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு சிறப்பு கூடுதல் கலால் வரி/ செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு 6 ரூபாய் வீதமும், டீசலுக்கு லிட்டருக்கு 13 ரூபாய் வீதமும் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களாக கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. சுத்திகரிப்பு நிறுவனங்கள், உலக அளவில் நிலவும் விலைக்கு ஏற்ப தயாரிப்புகளை விற்பனை செய்து, அதிக லாபம் ஈட்டி வருகின்றன.

அதே சமயத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த வருடம் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் மீது லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 13 ரூபாயும் செஸ் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பெட்ரோல், டீசலுக்கும் இந்த செஸ் பொருந்தும். ஏற்றுமதி பெட்ரோல், டீசல் மீதான இந்த நடவடிக்கை உள்நாட்டு சில்லறை விற்பனையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

- கணபதி சுப்ரமணியம்.