இந்தியா

தீவிர புயலாக வலுப்பெற்றது அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல்

தீவிர புயலாக வலுப்பெற்றது அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல்

Veeramani

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டவ்-தே புயல் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நள்ளிரவு நிலவரப்படி கோவா மாநிலத்தின் பனாஜி நகரிலிருந்து 190 கிலோமீட்டர் தென்மேற்கு திசையிலும் மும்பையில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலும் டவ்-தே புயல் மையம் கொண்டிருந்தது.

12 மணிநேரத்திற்குள் இது, அதி தீவிர புயலாக மாறும் என கணித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர்-நாலியா இடையே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கேரளாவின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் இயல்புநிலை பாதிப்புக்கப்பட்டுள்ளது.

டவ் தே புயல் வரும் செவ்வாயன்று குஜராத்தில் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன் 5 மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 50க்கு மேற்பட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2 நாட்களில் கேரளா, கர்நாடகா, கோவாவில் கடலோர பகுதிகளில் பெரு மழை பொழிந்து நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 முதல் 160 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலோர மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் காசர்கோடு அருகே கடற்கரை பகுதியில் புயல் தாக்கத்தின் போது மாடி வீடு இடிந்து விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. மூசோடு கடற்கரையில் இருந்த வீட்டின் மேல்தளத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஆனால் புயல் எச்சரிக்கையை அடுத்து அவர்கள் காலி செய்த நிலையில் அந்த வீடு இடிந்து விழுந்துள்ளது.

இதனிடையே, புயலை எதிர்கொள்வது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடம் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஏற்கெனவே புயல் காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. புயலை சமாளிக்க மகாராஷ்டிரா அரசும் தயாராகி வருகிறது. கடற்கரையோர மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்பதால் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.