இந்தியா

முதல் முறையாக தீப்பற்றி எரிந்த மின்சார “கார்”! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய உரிமையாளர்!

முதல் முறையாக தீப்பற்றி எரிந்த மின்சார “கார்”! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய உரிமையாளர்!

ச. முத்துகிருஷ்ணன்

மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்து பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வந்த நிலையில், முதன்முறையாக மின்சார கார் ஒன்று இந்தியாவில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் டாடாவின் அதிக விற்பனையாகும் மாடலான நெக்ஸான் (Nexon) மின்சார கார் தீப்பற்றி எரிந்துள்ளது. அந்த காரின் உரிமையாளர் தனது அலுவலகத்தில் உள்ள சாதாரண சார்ஜரில் காருக்கு சார்ஜ் செய்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டிருக்கிறார்.

5 கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில், காரில் அலார ஒலி எழுந்ததோடு, உடனடியாக நிறுத்துமாறு எச்சரிக்கையும் வந்துள்ளது. இதையடுத்து காரிலிருந்து உரிமையாளர் இறங்கிய சில நிமிடங்களிலேயே மளமளவென தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக எச்சரிக்கை ஒலியை உணர்ந்து முன்கூட்டியே உரிமையாளர் கீழே இறங்கியதால் உரிமையாளர் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

டாடா நிறுவனத்தின் இந்த நெக்ஸான் மாடல் மின்சார வாகனம் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையாகியுள்ள நிலையில், முதல் தடவையாக தீப்பற்றி எரிந்துள்ளது. திடீரென மின்சார கார் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.