இந்தியா

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மாணவி உச்சநீதிமன்றத்தில் மனு

Rasus

நீட் தேர்வு தொடர்பாக நளினி சிதம்பரம் தொடர்ந்துள்ள வழக்கிற்கு, எதிர் ‌மனுதாரராக தன்னையும் சேர்க்கக்கோரி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 196.5 சதவிகிதம் கட்ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் ஆனால் நீட் தேர்வில் தான் 700-க்கு வெறும் 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த தனக்கு, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடைப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தினால், சிறந்த கல்லூரியிலேயே மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் என்று கூறும் அவர், நீட் தேர்வால் தன் மருத்துவக் கல்வி கனவு கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை விரைந்து நடத்தக் கோரி மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித இட ஒதுக்கீட்டை நிராகரித்து தீர்ப்பு வெளியான பின்னரும் கூட தமிழக அரசு மருத்துவக் கலந்தாய்வை தொடங்கவில்லை என கூறியிருந்தார். நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வை விரைந்து நடத்த தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அம்மனுவில் கூறியிருந்தார்.  தற்போது நளினி சிதம்பரம் தொடர்ந்துள்ள வழக்கிற்கு, எதிர் ‌மனுதாரராக தன்னையும் சேர்க்கக்கோரி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.