Dmk MPs  PT
இந்தியா

'ஜெய் ஹிந்து ராஷ்டிரா' To ’உதயநிதி வாழ்க’ - பதவியேற்பின் போது மக்களவையில் நடந்த சுவாரஸ்யங்கள்!

Prakash J

18வது மக்களவையின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கிய நிலையில், புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 எம்பிக்கள் இன்று (ஜூன் 25) பதவியேற்றுக் கொண்டனர். அந்த வகையில் முதலில் பதவியேற்ற திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில், “வாழ்க வையகம், வாழ்க தமிழ், ஜெய் ஜெகத். சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள். ஜெய் பீம்” என்றார்.

வடசென்னை தொகுதி திமுக எம்பி கலாநிதி வீராசாமி, ’’பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க! திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க’’ என முழக்கமிட்டார். தென்சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், ”வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க தமிழ்நாடு” என்றார். அதன்பின்னர் மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன் பதவியேற்கச் சென்றபோது, திமுக எம்பிக்கள் கை தட்ட தொடங்கினார்கள்.

இதையும் படிக்க: AFGvBAN|ஆப்கன் பயிற்சியாளர் காட்டிய சைகை.. நடிப்பை உருவாக்கிய வீரர்.. சிரிக்கவைக்கும் வைரல் #Video!

அப்போது தயாநிதி மாறன், ”சத்தம் பத்தல” என்றார். உடனே திமுக கூட்டணி எம்பிக்கள், நாடாளுமன்றமே அதிரும் வகையில் கைதட்டினார்கள். பின்னர் பதவியேற்ற தயாநிதி மாறன் ”வாழ்க தமிழ்.. வாழ்க பெரியார்.. வாழ்க அண்ணா.. வாழ்க கலைஞர்.. வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. வாழ்க உதயநிதி ஸ்டாலின்.. நீட் வேண்டாம்” என முழக்கமிட்டார். இவருக்குப் பின் பதவியேற்ற திமுக எம்பிக்களான செல்வம், ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, தரணிவேந்தன், செல்வகணபதி, பிரகாஷ், கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி உள்ளிட்டவர்கள் 'உதயநிதி வாழ்க' என முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் சிலர், ‘எங்களின் எதிர்காலம் உதயநிதி’ எனக் குரல் கொடுத்திருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், “வாழ்க தமிழ், வாழ்க அம்பேத்கர், வாழ்க பெரியார், வாழ்க எழுச்சித் தமிழர், வெல்க சமத்துவம், வெல்க சமூக நீதி” என முழங்கினார்.

இதையும் படிக்க: ’விசுவாசமே இல்லை?’ கட்சியை விமர்சித்த வசுந்தரா ராஜே.. ராஜஸ்தான் பாஜகவில் வீசும் புயல்! பின்னணி என்ன?

இதில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான கே.கோபிநாத் தனது தாய் மொழியான தெலுங்கில் பதவியேற்றுக் கொண்டார். இறுதியில் அவர், “ஜெய் தமிழ்நாடு” என்றார்.

இன்றைய பதவியேற்பின்போது, உத்தரப் பிரதேச பாஜக எம்.பி. சத்ரபால் சிங் 'ஜெய் ஹிந்து ராஷ்டிரா' என கோஷமிட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்திய அரசியலமைப்பிற்கு முரணாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதால், செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த மார்க்சிஸ்ட் எம்பி அம்ரா ராம்.. வைரலாகும் பழைய புல்டோசர் வீடியோ!

திரிணாமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி பதவியேற்புதான் மிகவும் சுவாரஸ்யமாக நடந்தது! வரும் போதே மிகவும் உற்சாகமாக வந்த கல்யாண் பானர்ஜி பதவியேற்று முடிக்கும் போது பாஜக எம்பிக்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். உடனே ஜெய் காளி, ஜெய் ஜெகன்நாதர் என்று சத்தமாக முழக்கமிட்டு பதிலடி கொடுத்தார் கல்யாண் பானர்ஜி.

ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்பிக்கள்.. ஜெய் பீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என்று கூறி பதவியேற்ற ஹைதராபாத் AIMIM கட்சி எம்.பி. ஓவைசி அசாதுதீன்!

எப்பொழுதும் கையில் வைத்திருக்கும் சிறிய அரசியலமைப்பு புத்தகத்துடன் வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பதவியேற்றபின், ‘வெல்க இந்தியா, வாழ்க அரசியலமைப்பு’ என்று முழக்கமிட்டார்.

இப்படி எம்பிக்கள் பதவியேற்கும் போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன.