பாத்திமா பீவி file image
இந்தியா

முதல் பெண் நீதிபதி - தமிழ்நாடு முன்னாள் ஆளுநர்.. யார் இந்த பாத்திமா பீவி? சாதனைகளும் விமர்சனங்களும்!

இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநராகவும் பணியாற்றிய பாத்திமா பீவி இன்று 96வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

யுவபுருஷ்

கேரள மாநிலம் கொள்ளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க பதவிகளில் பதவி வகித்த சிங்கப்பெண் பாத்திமா பிவீயின் அரசியல் ரீதியான நிலைப்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்த நேரத்தில், பாத்திமா பிவீயின் வாழ்க்கை வரலாற்றையும், அரசியல் நிலைப்பாடுகளையும் ஒருமுறை திரும்பிப்பார்க்கும் சிறு முயற்சியே இந்த சிறப்புத் தொகுப்பு.

கேரளாவைச் சேர்ந்த பாத்திமா, 1927ம் ஆண்டில் ஏப்ரல் 30ம் தேதி பத்தனம்திட்டா எனும் ஊரில் பிறந்தார். சட்டக்கல்வி முடித்து எர்ணாகுளத்தில் இந்திய பார் கவுன்சில் தேர்வெழுதினார். அதில் முதலிடம் பிடித்து வழக்கறிஞராக பணியாற்றி 1989ம் ஆண்டு பணி ஓய்வுபெற்றார். அடுத்த 6 மாதத்தில் பாத்திமாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்தது மத்திய அரசு. இந்திய வரலாற்றில் இந்த பதவியை வகித்த முதல் பெண் பாத்திமாவே.

1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்றபின், 1997ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். இதனால், தமிழ்நாட்டில் ஆளுநர் பொறுப்பை வகித்த முதல் பெண்மணியாகவும் திகழ்ந்தார் பாத்திமா. ஆனால், அடுத்தடுத்த காலங்களில் கருணாநிதி - பாத்திமா இடையே மோதல்போக்கே நீடித்தது.

இதையடுத்து, 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில், சொத்துக்குவிப்பு வழக்கால் தேர்தலிலேயே போட்டியிடாத ஜெயலலிதாவை, கட்சியின் பெரும்பான்மையை கொண்டு முதல்வராக பதவியேற்க அழைப்புவிடுத்தார் பாத்திமா. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்றும் பேசப்பட்டார். இருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நேரத்தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளானார் பாத்திமா.

ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு எடுத்த பல முக்கிய முடிவுகளால் விமர்சனத்திற்கும் உள்ளானார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் கருணை மனுவை நிராகரித்தார்.

ஒருகட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து பாத்திமாவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத் தலைவரைச் சந்திக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. ஆனால், அதற்கு முன்னரே தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் அவர்.

விமர்சனங்களை கடந்து ஒட்டுமொத்த பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த பாத்திமாவுக்கு இன்று பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். “ஓய்வு பெற்ற பிறகு நீதிபதிகள் எந்த சார்பு நிலையும் எடுக்காமல் நடுநிலையைப் பின்பற்ற வேண்டும். பாதை மாறிவிடக் கூடாது. சுயமாக முடிவெடுக்கும் திறனும் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் தெளிவும் வேண்டும்'' என்று கருத்து சொன்ன பாத்திமா என்றென்றும் போற்றப்படும் சிங்கப்பெண் என்பதில் சந்தேகமில்லை.