எடியூரப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்: மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். குடிநீர் தேவைக்காக புதிய அணை கட்டப்படுவதாகக் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நதிநீர் பிரச்னை - துரைமுருகன் டெல்லி பயணம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செக்காவத்தை சந்திக்க தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார். மேகதாது, மார்கண்டேய நதி அணை பிரச்னைகள், முல்லைப் பெரியாறு குறித்து பேச வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்: தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
1.5 டன் இனிப்புகள் எடுத்ததற்கான ஆதாரம் உள்ளது: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு தீபாவளி நாட்களில் ஒன்றரை டன் இனிப்புகளை ஆவின் நிறுவனம் இலவசமாக வழங்கியதற்கு ஆதாரம் இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உயிருடன் இருந்த குழந்தை இறந்ததாக சான்றிதழ்: தேனி அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்த குழந்தை இறந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துத்துறை அமைச்சரும், மருத்துவமனை டீனும் புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்துள்ளனர்.
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசு என்பதை ஏற்கமுடியாது: இந்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், திமுக அரசு இந்திய அரசை சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு: உத்தராகண்ட் மாநில புதிய முதலமைச்சராக பதவியேற்றார் புஷ்கர் சிங் தாமி. ஆளுநர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சிறுமிகள் மீது கொடூர தாக்குதல்: மத்தியப்பிரதேசத்தில் செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேசியதாகக் கூறி இரண்டு சிறுமிகளை சகோதரர்கள், உறவினர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கிய கொடூர சம்பவம்அரங்கேறியுள்ளது.
ராணுவ விமானம் விபத்து - 29 வீரர்கள் பலி: பிலிப்பைன்ஸில் ராணுவ வீரர்கள் சென்ற விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கியது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.