இந்தியா

விரைவுச் செய்திகள்: குடியரசுத் தலைவர்- ஆளுநர் சந்திப்பு | கோவாக்சினுக்கு அங்கீகாரம்?

விரைவுச் செய்திகள்: குடியரசுத் தலைவர்- ஆளுநர் சந்திப்பு | கோவாக்சினுக்கு அங்கீகாரம்?

Sinekadhara

குடியரசுத் தலைவர்- ஆளுநர் சந்திப்பு: டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். பதவியில் இருந்து மாற்றப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடந்தேறியுள்ளது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், மதுபான கூடங்கள் திறப்பதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி: பிற மாநிலங்களுடனான தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடைகள் 9 மணி வரை செயல்படலாம்: உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு. திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீடிக்கிறது.

தமிழகத்தில் கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு அனுப்பிய தடுப்பூசிகளை விட தமிழகத்தில் கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

ஒலி மாசு ஏற்படுத்தினால் ரூ. 1 லட்சம் அபராதம்: டெல்லியில் ஒலிமாசு விதிகளை மீறினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துக: தமிழகத்தை ஒட்டிய கேரள கிராமத்தில் ஜிகா வைரஸ் தொற்று 15 பேருக்கு உறுதியானதை அடுத்து தமிழக எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதலுக்காக 20 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கடலூரில் மழையில் நனைந்து நெல் மணிகள் வீணாகி வருகின்றன.

ரேசன் கடைகளில் புகார் பதிவேடு: அனைத்து ரேசன் கடைகளிலும் புகார் பதிவேடு பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இணைய வழியில் புகார் தெரிவிப்பதில் சிரமங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அரசுப் பேருந்துகள் ஆயுட்காலம் அதிகரிப்பு: அரசு விரைவுப் பேருந்துகளின் ஆயுட்காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச அரசின் அதிரடி திட்டம்: 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலையும் அரசு மானியங்களும் கிடையாது என மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச அரசு உருவாக்கியுள்ள வரைவு மசோதாவில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கோவாக்சினுக்கு அங்கீகாரம் எப்போது?: கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து அடுத்த 4 முதல் 6 வாரங்களில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா - இலங்கை தொடர் தாமதம்: இந்தியா, இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர் தொடங்குவதில் தாமத ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 18ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.