18 மாவட்டங்களில் 2 மணி நேரத்தில் மழை:
18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமென தெரிவித்திருக்கிறது.
ஏடிஎம் கொள்ளை - கும்பல் தலைவனுக்கு போலீஸ் காவல்:
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளைக் கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு:
100 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 2 கோடியே 85 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் அலுவலகத்தில் லாக்கரை திறக்க இயலாததால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் பூங்காக்களை மூட உத்தரவு:
கொடைக்கானலில் நேற்று திறக்கப்பட்ட மூன்று பூங்காக்களை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழிறங்கியது:
பல மாதங்களுக்குப் பிறகு ஜூனில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடிக்கு கீழ் குறைந்தது. கொரோனா இரண்டாம் அலையால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் தாக்கமே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
8ஆம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?:
மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிராத்ய சிந்தியா, சர்பானந்த சோனாவால், சுஷில் குமார் மோடி, நாராயணன் ரானே ஆகியோருக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மத்திய அமைச்சருக்கு ஆளுநர் பதவி:
கர்நாடகா, மிசோரம், கோவா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மத்திய அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒளிப்பதிவு மசோதா - முதல்வர் வலியுறுத்தல்:
ஒன்றிய அரசின் வரைவு ஒளிப்பதிவு மசோதாவை திரும்பப்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளதாக, ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
கலப்பு தொடரோட்டத்தில் 3 தமிழக வீராங்கனைகள்:
ஒலிம்பிக் கலப்பு தொடரோட்டத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 3 வீராங்கனைகளும் தமிழர்களே ஆவர். ரேவதியுடன், தனலட்சுமி, சுதா வெங்கடேசன் பங்கேற்க உள்ளனர்.
ஒலிம்பிக் தடகளத்தில் 5 தமிழர்கள்:
ஆடவர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜூ, நாகநாதன் பாண்டி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். முதல் முறையாக ஒலிம்பிக் தடகளத்தில் தமிழகத்தில் இருந்து 5 பேர் பங்கேற்கின்றனர்.
ஷூ கூட இல்லாமல் பயிற்சி - ரேவதி உருக்கம்:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மதுரையை சேர்ந்த ரேவதி வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறுவயதில் 'ஷூ' கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி பெற்றதாக புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
காலாவதியான பொருட்கள் - எச்சரிக்கை:
காலாவதியான பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் ஆய்வு செய்யும் அதிகாரியே பொறுப்பு என மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணை பிரச்னைகளுக்கு தீர்வு-மத்திய அமைச்சர் உறுதி:
மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணைக் கட்டிய பிரச்னைக்கு தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தை கேட்காமல் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்றும் மத்திய அமைச்சர் செகாவத் உறுதியளித்தாக துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.
குறைதீர்ப்பு அதிகாரி - ட்விட்டருக்கு நீதிமன்றம் கெடு:
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் புதிய விதிகளை பின்பற்ற குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கும் விவகாரத்தில் நாளை மறுநாளுக்குள் பதிலளிக்க ட்விட்டருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகதாது அணை கட்டியே தீருவோம்:
காவிரியில் மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி அளித்துள்ளார். நட்புரீதியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார்.
காவிரி தண்ணீர் - விவசாயிகள் கோரிக்கை:
மேட்டூரில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடகாவிடம் பெற வேண்டும் என அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆடி கார் மட்டுமே உள்ளது; சொகுசு கார் இல்லை:
பப்ஜி மதனிடம் ஆடி கார் மட்டுமே இருப்பதாகவும், சொகுசு கார்கள் இல்லை என மனைவி கிருத்திகா பேட்டியளித்துள்ளார்.
சிதம்பரம் - ஆனி திருமஞ்சன விழா தொடக்கம்:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கப்பட்டது. கொடியேற்ற நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
ஸ்டேன் சுவாமி மறைவு - ஐநா இரங்கல்:
பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி உயிரிழப்புக்கு ஐநா மனித உரிமை அமைப்பு இரங்கல் தெரிவித்திருக்கிறது. மேலும் கொரோனா சூழலில், போதிய ஆதாரங்களின்றி காவலில் வைக்கப்பட்டிருப்போரை அரசுகள் விடுவிக்க வலியுறுத்தி இருக்கிறது.
ஸ்பெயினை எதிர்கொள்ளும் இத்தாலி:
விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தில் யூரோ கோப்பை கால்பந்து. நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் இத்தாலியை எதிர்கொள்கிறது ஸ்பெயின்.
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் - மிதாலி முதலிடம்:
ஒரு நாள் கிரிக்கெட்டில் பெண்களுக்கான பேட்டிங் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் 3 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.