தமிழிசை pt desk
இந்தியா

ஆளுநர் பதவி ராஜினாமா.. மீண்டும் தேர்தலில் களமிறங்கும் தமிழிசை.. புதுச்சேரியில் போட்டியா?

தமிழிசை செளந்தரராஜன், தமது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்திருப்பதை அடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

நாடாளுமன்றத் தேர்தல் வேகம் பிடித்துவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அதன் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனினும், தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் முதல் அனைத்தும் தேர்தல் சம்பந்தமான பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன.

இந்த நிலையில், தெலங்கானா மாநில ஆளுநரும் கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் பொறுப்பு வகித்த தமிழிசை செளந்தரராஜன், தாம் வகித்த ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, இதுகுறித்து அவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தமிழிசை செளந்தரராஜன், தமது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்திருப்பதை அடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி அல்லது புதுச்சேரியில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதில் 90 சதவிகிதம் புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது.

புதுச்சேரியில் அவர் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர்களும் நம்மிடையே கருத்து தெரிவித்துள்ளார். (அவருக்கு அங்கு எப்படி சூழல் இருக்கிறது என்பது குறித்து ஷ்யாம் சொன்னதை மேல் இணைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் அறியலாம்)

இதையும் படிக்க: தேர்தல்பத்திர நன்கொடை: ரெய்டுக்குப்பின் ஓராண்டில் கோடிகளை அள்ளி வழங்கிய மாட்டிறைச்சி நிறுவனங்கள்!

அரசியலில் தமிழிசை...

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், திமுக எம்.பி. கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதுவரை தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட்டார். அதன்பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு, புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசை

யார் இந்த தமிழிசை செளந்தரராஜன்?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன், பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். இவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் மகளும், தொழிலதிபரும் முன்னாள் எம்.பியுமான மறைந்த எச்.வசந்தகுமாரின் மருமகளும் ஆவார். மகப்பேறு மருத்துவ நிபுணரான தமிழிசை, பாஜகவின் கொள்கைகள் மீதான காதலால் அக்கட்சியில் இணைந்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பாஜக-வில்

- 1999இல் தென் சென்னை மாவட்ட மருத்துவப் பிரிவு செயலாளராகவும்,

- 2001இல் மாநில பொதுச் செயலாளராகவும்,

- 2005இல் அகில இந்திய இணை ஒருங்கிணைப்பாளராகவும் (தென் மாநிலங்களுக்கான மருத்துவப் பிரிவு),

- 2007இல் மாநிலப் பொதுச் செயலாளராகவும் கட்சியின் மாநிலப் பிரிவில் பணியாற்றியுள்ளார்.

- 2010இல் மாநிலத் துணைத் தலைவராகவும்,

- 2013இல் தேசியச் செயலாளராகவும் பதவி வகித்த தமிழிசை, பின்னாளில் அதாவது 2014ஆம் ஆண்டு மாநில பாஜக தலைவராகவும் உயர்ந்தார்.

தமிழிசை செளந்தரராஜன்

இதற்கிடையே 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியுற்றார். தாம் சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் மக்கள் தனக்கு தோல்வியையே பரிசளித்தாலும், அதிலிருந்து துவண்டுவிடாமல் கட்சிப் பணியைத் தொடர்ந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். குறிப்பாக, பாஜகவை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்த பெருமைக்குரியவர்களில் தமிழிசைக்கும் ஓர் இடம் உண்டு. இவரது பேச்சுத்திறன் மற்றும் மொழிபெயர்ப்புத் திறன் தேசியத் தலைவர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. முன்னாள் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, ஜஸ்வந்த் சிங், வெங்கையா நாயுடு போன்றோரின் உரைகளை அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

இதையும் படிக்க: பாஜகவை ஒதுக்கிவிட்டு திமுகவுக்கு குறி..விமர்சனத்தில் விஜய் கட்சியின் முதல் அரசியல் அறிக்கை! அடுத்து?