அமித் ஷா, தமிழிசை எக்ஸ் தளம்
இந்தியா

’சொன்னது இதுதான்..’ மேடையில் அமித் ஷா கண்டித்ததாக வைரல் ஆன வீடியோ.. விளக்கமளித்த தமிழிசை!

Prakash J

18-வது மக்களவைத் தேர்தலின்போது ஆந்திரப் பிரதேசத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்குதேசம் மற்றும் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அம்மாநில முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு, நேற்று (ஜூன் 12) பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு கிளம்பினார்.

அப்போது அவரை அழைத்த அமித் ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கணிவான முறையில் பதிலளித்தார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அமித் ஷா, காட்டமாக பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதனால், தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. மேலும் இதுதொடர்பாக கட்சித் தலைமை இருதரப்பிலிருந்தும் விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இதையும் படிக்க: IPL 2024|Cup வாங்கலனாலும் CSK first.. RCB second.. 3 இடங்களுக்குள் வராத மும்பை! எதில் தெரியுமா?

இந்த நிலையில், அமித் ஷா கண்டித்தது தொடர்பான வீடியோவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதிலளித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் குறித்தே மத்தியமைச்சர் அமித் ஷா என்னிடம் கேட்டார்.

நான் விவரித்துக்கொண்டிருந்தபோது போதிய நேரமின்மையால் பணிகளை தொடருமாறு அறிவுறுத்தினார். தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சிக்கிம்| நேற்று எம்.எல்.ஏவாக பதவியேற்பு.. இன்று ராஜினாமா.. முதல்வர் மனைவி அதிரடி!