சீர்காழியில் இருந்து கோயில் பணிக்காக ஆந்திரா சென்ற 9 பேர் சொந்த ஊர் திரும்ப உதவ வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ராதாநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோயில் சிற்ப கலைஞர்கள் 9 பேர் ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள பிமிலியில் பெருமாள் கோயில் செய்யும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். ராதாநல்லூரை சேர்ந்த நவீன்குமார், விஜியகுமார், சுவாமிநாதன், கருணாநிதி, செந்தில், மணிகண்டடைன், சுபாஷ், செல்லத்துரை, முரளி ஆகிய அந்த 9 பேரும் கடந்த மூன்று மாதங்களாக பணி செய்து கோயில் வேலைகளை முடித்துள்ளனர்.
இருப்பினும் தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். கோயில் பணிகள் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், கையில் இருந்த காசும் செலவாகியதாக தெரிகிறது. இதனால் போதிய உணவும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
நகர் பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால் அவர்கள் உணவு பொருள் மற்றும் அவசர தேவைக்கு கூட 5 கிலோமீட்டர் வரை நடந்தே செல்லும் நிலையில் உள்ளனர். எனவே தங்களை மீட்டு சொந்த ஊர் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ்அப்பில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.