இந்தியா

பாரதியார், பாரதிதாசனின் இல்லங்களில் இந்தி, ஆங்கில விளம்பர பதாகைகள்! தமிழ் புறக்கணிப்பு?

பாரதியார், பாரதிதாசனின் இல்லங்களில் இந்தி, ஆங்கில விளம்பர பதாகைகள்! தமிழ் புறக்கணிப்பு?

webteam

புதுச்சேரியில் முதுபெரும் தமிழறிஞர்களான மகாகவி பாரதியார் மற்றும் பாரதிதாசன் வாழ்ந்த வீடுகளில் ஜி 20 மாநாட்டிற்காக வைக்கப்பட்ட  விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்து விட்டு இந்தி மற்றும் ஆங்கிலம் இடம்பெற்றுள்ளதற்கு பாரதிதாசன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜி20 நாடுகளின் ஓராண்டுக்காலத் தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனிடையே ஆரம்பகட்ட மாநாடு வரும் ஜனவரி 30 மற்றும் 31ந் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறுகின்றது. இதற்காக புதுச்சேரி முழுவதும் விளம்பர பதாகைகளை அரசு வைத்துள்ளது. அந்த விளம்பர பதாகைகளில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ளதற்கு தமிழறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த அருங்காட்சியகத்திலும், பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த வீட்டிலும் புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத்துறை ஜி.20 மாநாடு குறித்த விளம்பர பதாகை வைத்துள்ளனர். அதில் ஆங்கிலமும் இந்தி மொழி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இருபெறும் தமிழறிஞர்கள் வாழ்ந்த வீடு அருங்காட்சியமாக உள்ள நிலையில் இங்கு வரும் தமிழர்களுக்கு புரியாத இந்தி மொழியில் பதாகை வைத்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து பேசிய பாவேந்தர் பாரதிதாசனின் பேரனும் முன்னாள் அகில இந்திய வானொலி நிலைய இயக்குனருமான செல்வம் பேசுகையில், “புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1939 லேயே இந்தி திணிப்பை எதிர்த்துப் பாடுயிருக்கிறார். தொடர்ந்து மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்தவர் அவர். அதேபோல் அவரது மகனும், எனது தந்தையுமான மன்னர் மன்னன் 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போரில் 48 நாட்கள் சிறையிலிருந்த வரலாற்றை தமிழ்க்கூறும் நல்லுலகம் அறியும்.

அவர்கள் வாழ்ந்த வீடாகவும், நினைவு இல்லமாகவும் உள்ள இந்த இல்லங்களின் வாயிலில் புதுவையில் நடைபெற உள்ள ஜி.20 மாநாடு தொடர்பான புதுவை அரசுக் கலை பண்பாட்டுத்துறை விளம்பரத்தில் தமிழ் இல்லை. இந்தியும் ஆங்கிலமுமே இருப்பதை எப்படி ஏற்க முடியும்? `உலகில் எந்த மொழியையும் படிக்கலாம். ஆனால் தமிழை தவிர்த்து விடக்கூடாது’ என பாடிய மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டிலும் தமிழை தவிர்த்து இந்தி மொழி இடம்பெற்றுள்ளது வேதனைக்குறியது.

ஆகவே இந்தி மொழித்திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பாரதிதாசன் நினைவு அருங்காட்சியக வாசலில் வைக்கப்பட்டுள்ள இந்தி, ஆங்கில விளம்பரம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். அதே போல் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டிலும் உள்ள தமிழ் அல்லாத பதாகைகளை அகற்ற வேண்டும். அவ்வாறு  புதுவை அரசு உடனே செய்யாவிடில் தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களைத் திரட்டி மாபெரும் அறப் போராட்டம் அந்ந அருங்காட்சியகத்தின் முன்பு  நடைபெறும்” என தெரிவித்தார்.