குழந்தை திருமணம் கோப்புப்படம்
இந்தியா

குழந்தை திருமணம்: முதலிடத்தில் தமிழ்நாடு; உச்சநீதிமன்றத்தில் ரிப்போர்ட் கொடுத்த மத்திய அரசு!

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தியாவை பொறுத்தவரை பெண்களின் திருமண வயது 18 என்றும், ஆண்களின் திருமண வயது 21 என்றும் உள்ளது. இந்த வயதிற்கு கீழ் ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொண்டால், அது குழந்தை திருமணமாகவும், சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது.

குழந்தை திருமணம்

ஆனால், இந்த சட்டத்தை பெரும்பால மாநிலங்கள் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்று “அறிவொளி மற்றும் தன்னார்வ நடவடிக்கைக்களுக்கான சமூகம்” என்ற தன்னார்வ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று வந்தது.

விசாரணையில் இந்த வழக்கில், மத்திய அரசு குழந்தை திருமணம் தொடர்பான புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. அதில் தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஆந்திரா, போன்றவை குழந்தை திருமணங்கள் நடைபெறும் மாநிலங்களில் முன்னிலையில் இருப்பதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

குழந்தை திருமண தடை சட்டம்

மத்திய அரசின் ரிப்போர்ட்படி, கடந்த மூன்று ஆண்டுகளில்

  • தமிழகத்தில் 8,966,

  • கர்நாடகாவில் 8,348,

  • மேற்கு வங்கத்தில் 8,324,

  • தெலங்கானாவில் 4,440,

  • ஆந்திராவில் 3,416,

  • அசாமில் 3,316,

  • மகாராஷ்டிராவில் 2,043,

  • குஜராத்தில் 1,206,

  • உத்தரப்பிரதேசம் 1197,

  • ஹரியானாவில், 1,104

குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

இத்துடன், “பல இடங்களில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று இருந்தாலும், குறைந்த நபர்களின் மீதுதான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்ற தகவலையும் வழங்கியுள்ளது மத்திய அரசு.

மேலும், குழந்தை திருமணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை திருமணம்

புள்ளிவிவரங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து, “குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை” எனக்கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.