இந்தியா

சீனாவில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள், பெற்றோர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

சீனாவில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள், பெற்றோர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

Sinekadhara

சீனாவில் மருத்துவம் படித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா காரணமாக இந்தியா திரும்பி 2 ஆண்டுகளாகியும் மீண்டும் சீனா திரும்ப முடியாததால் கல்வி பாதிக்கப்படுவதாக பேட்டியளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் சீனா செல்ல அந்நாடு அனுமதி மறுத்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மருத்துவ மாணவர்கள் தங்களின் மருத்துவக் கல்வியை தொடரமுடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறையிடம் பேசி வருகிறார். இந்நிலையில் சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நாங்கள் மீண்டும் சீனா சென்று மருத்துவக்கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைன் மூலமாக கல்வி பயில்வதால் சரியாக எங்களால் படிப்பைத் தொடர முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் இதுவரை எங்கள் கோரிக்கையை செய்து முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

அதேபோன்று ஏற்கெனவே மருத்துவ முடித்த மாணவர்களை இன்டன்ஷிப் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தை தவிர்த்து டெல்லி, அரியானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.