இந்தியா

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து: தமிழ்நாடு முதலிடம்..!

Sinekadhara


விபத்துச் செய்திகள் இல்லாத நாளே கிடையாது. அதிலும் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் நடப்பதைப் பார்க்கிறோம். நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஆங்காங்கே விபத்துப் பகுதிகளைப் பார்க்கமுடியும். தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக விபத்துப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் விபத்தால் 10 இறப்புகளுக்கும் மேல் நடக்கும்போது அந்த இடம் விபத்துப்பகுதியாக குறிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் ஒவ்வொரு 500 மீட்டரிலும் குறைந்தது 5 விபத்துகள் நடந்திருக்கிறது.

2015லிருந்து 2019 வரை நமது நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துப்பகுதியாக குறிக்கப்பட்ட 5,489 பகுதிகளில் 748 பகுதிகள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டு, அதிக விபத்து ஏற்படும் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களில் 113 இடங்கள் குறிக்கப்பட்டு டெல்லி முதலிடத்தில் உள்ளது.

31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொடுத்த தகவலின்படி இது வெளியாகியுள்ளது. ஆனால், மகாராஸ்டிராவில் வெறும் 25 பகுதிகளும், ஹரியானாவில் 23 பகுதிகளும், பீஹாரில் 92 பகுதிகளும் குறிக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளப்பட தக்கதாக இல்லை என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநில காவல்துறை அதிகாரிகள் கொடுத்த இந்த தரவுகள் தவறானவை என அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணம், சில மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர மற்ற இடங்களில் 380 பகுதிகள் விபத்துப்பகுதியாகக் குறிக்கப்பட்டுள்ளன.

வழக்குப்பதிவான விபத்துக்களை மட்டுமே வைத்து இந்த தரவுகளை காவல்துறை கொடுத்துள்ளதால், சரியான தரவுகள் எடுக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

2011லிருந்து இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 2011-14 வரையில் எடுக்கப்பட்ட தரவுகளை வைத்து 789 விபத்துப்பகுதிகள் குறிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். சாலை பாதுகாப்பை அதிகரிக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.